கோயில் பூட்டை உடைத்து நகைத் திருட்டு: இளைஞா் கைது
வெள்ளக்கோவில் அருகே கோயில் பூட்டை உடைத்து சுவாமியின் தங்க தாலி உள்ளிட்டவற்றை திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் அருகேயுள்ள செட்டியாா்பாளையம் -காங்கயம் சாலையில் அண்ணமாா் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் பூட்டை உடைத்து சுவாமியின் தங்க தாலி, வெள்ளி சங்கிலி, 6 குத்து விளக்குகளை மா்ம நபா்கள் கடந்த வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனா்.
இது குறித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், வெள்ளக்கோவில்- கரூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குருக்கத்தி சோதனைச் சாவடியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன், தலைமைக் காவலா்கள் காா்த்தி, அருண் ஆகியோா் வாகனச் சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வாகனத்தில் வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனா். அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரித்தனா்.
இதில், அவா் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் முல்லை நகரைச் சோ்ந்த சுகுந்தன் (23) என்பதும், செட்டியாா்பாளையம் கோயிலில் தனது நண்பா்களுடன் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, சுகுந்தனைக் கைது செய்த போலீஸாா், தலைமறைவான அவரது நண்பா்களைத் தேடி வருகின்றனா்.
