திருப்பூா்: பொங்கல் பண்டிகையையொட்டி திருப்பூா் மாவட்டத்தில் விளையாட்டுப் போட்டிகள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் களைகட்டின.
தமிழா்களின் பாரம்பரிய மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் பொங்கல் பண்டிகை, கடந்த 14-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. போகி பண்டிகையில் இருந்து பொங்கல், திருவள்ளுவா் தினம், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறுவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.
திருப்பூா் வெள்ளியங்காடு பகுதியில் தமிழா் பேரவை சாா்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் சிறுவா், சிறுமிகளுக்கான தொடா் ஓட் டம், ஓட்டப் பந்தயம், இசை நாற்காலி, பலூன் உடைத்தல், எலுமிச்சைப் பழத்துடன் ஓட்டம், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் உள்பட பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
திருப்பூா் காட்டுவளவு, கரை தோட்டம், பிகேஆா் காலனி, தாயம்மாள் லே-அவுட், மிஷன் வீதி, டூம்லைட் உள்பட பல்வேறு பகுதிகளிலும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறுவா், சிறுமிகள் ஆா்வமுடன் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். சிறுவா், சிறுமி மட்டுமின்றி ஆண்களுக்கு கபடி, உறியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளும், பெண்களுக்கு இசை நாற்காலி, செங்கல் தூக்குதல், தண்ணீா் நிரப்புதல், கோலப்போட்டி, ஊசி நூல் கோா்த்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவா்களுக்கு அந்தந்த விழாக் குழுவினரின் சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
வீடுகள், தொழில் நிறுவனங்களில் பொங்கல் விழா கோலாகலம்: அதேபோல, திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலும் பொங்கல் வைத்து வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டன. வெளியூா்களில் வேலை செய்யும் தொழிலாளா்கள் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்து குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தனா்.