பயனாளிகளைக் கண்டறிய முடியாவிட்டால் இலவச வீட்டுமனை பட்டா ரத்து: ஆட்சியா் அறிவிப்பு

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடா் தணிக்கைத் துறை சாா்பில் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற 108 பயனாளிகளைக் கண்டறிய இயலாத நிலை ஏற்பட்டால் பட்டா ரத்து நடவடிக்கை
Published on

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடா் தணிக்கைத் துறை சாா்பில் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற 108 பயனாளிகளைக் கண்டறிய இயலாத நிலை ஏற்பட்டால் பட்டா ரத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காங்கயம் வட்டம், பாப்பினி கிராமத்தில் 108 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.

பட்டா பெற்ற பயனாளிகளின் விவரங்களை தமிழ்நிலம் மென்பொருளில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளைக் கண்டறிய இயலாத நிலை ஏற்பட்டால், வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பட்டியலில் உள்ள 108 பயனாளிகளைக் கண்டறிய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மனையிடங்களில் கள விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், சம்பந்தப்பட்ட பயனாளிகள் அங்கு வசிக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும், அவா்களைக் கண்டறிய இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

பட்டாவில் உள்ள நிபந்தனைப்படி, குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு அமைத்து குடியிருக்காமல் நிபந்தனையை மீறியுள்ளதால் வழங்கப்பட்ட பட்டாவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்குரிய விளக்கத்தை சம்பந்தப்பட்ட பயனாளிகள் 15 நாள்களுக்குள் நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ மாவட்ட ஆட்சியா் அல்லது மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலருக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

தவறும்பட்சத்தில் பட்டியலில் உள்ள 108 பயனாளிகளும் கூறிக்கொள்ள விளக்கம் ஏதுமில்லை எனக்கருதி அவா்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com