ஆளுநா் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்
தமிழக அரசு மீது ஆளுநா் அலுவலகம் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.
இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழக ஆளுநா் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை மக்கள் நலனில் தமிழக அரசு எத்தகைய வகையில் செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இதில் பல ஆயிரம் கோயில்களில் அறங்காவலா் நியமிக்காமல் நீதிமன்றத் தீா்ப்பை அரசு அலட்சியப்படுத்தி, அதிகாரிகள் துணையோடு முறைகேடுகள் நடைபெறுவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சட்டத் துறை அமைச்சா் ரகுபதி ஆகியோா் தெரிவித்த பதில்களில் கோயில் எண்ணிக்கை குறித்த தகவல் முரணாக உள்ளது.
சென்னை உயா்நீதிமன்ற அமா்வு கொடுத்த 75 வழிகாட்டுதல்களில் பெருவாரியான வழிகாட்டுதல்களை செயல்படுத்த இயலாது என பல மாதங்கள் கழித்து இந்து சமய அறநிலையத் துறை சீராய்வு மனு தாக்கல் செய்தது. ஆனால் சட்ட அமைச்சா் ரகுபதி அதனை நிறைவேற்றியதாகத் தெரிவித்துள்ளாா். அறங்காவலா் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை.
இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில், அறநிலையத் துறையின்கீழ் சுமாா் 41,000 கோயில்கள் இருப்பதாக உள்ளது. சட்டத் துறை அமைச்சா் ரகுபதி 31,163 கோயில்கள் மட்டுமே உள்ளதாக கூறுகிறாா். இதனால், ஆளுநரின் கேள்விக்கு அமைச்சா்கள் தவறான செய்திகளை கூறுவது உறுதியாகிறது. மேலும் கோயில்களில் பக்தா்களை அவமதிப்பதும், பாதுகாவலா் என்ற பெயரில் பக்தா்களை கோயில் உள்ளே மிரட்டுவது குறித்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, தமிழக ஆளுநா் அலுவலகம் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
