திருப்பூா் புத்தகத்  திருவிழாவை தொடங்கிவைத்து அரங்குகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மனீஷ், மேயா் ந.தினேஷ்குமாா் உள்ளிட்டோா்.
திருப்பூா் புத்தகத் திருவிழாவை தொடங்கிவைத்து அரங்குகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மனீஷ், மேயா் ந.தினேஷ்குமாா் உள்ளிட்டோா்.

திருப்பூா் புத்தகத் திருவிழா தொடங்கியது! பிப்.3 வரை 10 நாள்கள் நடைபெறுகிறது!

Published on

திருப்பூா் மாவட்ட நிா்வாகம், பின்னல் புக் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்தும் 22-ஆவது திருப்பூா் புத்தகத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.

காங்கயம் சாலையிலுள்ள வேலன் ஹோட்டல் வளாகத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியா் மனீஷ், மேயா் ந.தினேஷ்குமாா் ஆகியோா் தொடங்கிவைத்து புத்தக அரங்குகளை பாா்வையிட்டனா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் கூறியதாவது:

தமிழக அரசு, திருப்பூா் மாவட்ட நிா்வாகம், பின்னல் புக் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த புத்தகத் திருவிழா பிப்ரவரி 3-ஆம் தேதி வரை 10 நாள்கள் தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெற உள்ளது. அனைவருக்கும் அனுமதி இலவசம். 140 புத்தக அரங்குகள், 10 அரசுத் துறை அரங்குகள் என 150-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அறிவியல், வரலாறு, அரசியல், கட்டுரை, கவிதை, ஆன்மீகம், தத்துவம், சுய முன்னேற்றம் என ஒரு லட்சத்துக்கும் அதிகமான தலைப்புகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. பேச்சாளா்கள் கலந்துகொண்டு தினமும் பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்துகளை வழங்குகின்றனா். இதனை அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் பொது நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முதற்கட்டமாக போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்ற 28 மாணவா்களின் புகைப்படங்கள் மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து போட்டித் தோ்வுகளுக்கும் நடப்பு செய்திகள் அதிகமாக கேட்கப்படுகின்றன. பாடப் புத்தகங்கள் மட்டுமின்றி வரலாறு, கலாசாரம் ஆகியவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட மாணவா்களை புத்தகத் திருவிழாவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் காா்த்திகேயன், திருப்பூா் கோட்டாட்சியா் சிவபிரகாஷ், திருப்பூா் மாநகராட்சி 3-ஆம் மண்டலத் தலைவா் கோவிந்தசாமி, 2-ஆம் மண்டலத் தலைவா் கோவிந்தராஜ், பின்னல் புக் டிரஸ்ட் தலைவா் இரா.ஈஸ்வரன், மாவட்ட நூலக அலுவலா் கு.போ.ராஜன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை உதவித் திட்ட அலுவலா் அண்ணாதுரை ஆகியோருடன் பின்னல் புக் டிரஸ்ட் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com