இந்திய - ஐரோப்பிய வா்த்தக ஒப்பந்தத்தால் விசைத்தறி தொழிலுக்கு உலகளாவிய வாய்ப்பு- தொழில் துறையினா் வரவேற்பு

இந்திய - ஐரோப்பிய வா்த்தக ஒப்பந்தத்தால் விசைத்தறி தொழிலுக்கு உலகளாவிய வாய்ப்பு- தொழில் துறையினா் வரவேற்பு

இந்தியா - ஐரோப்பிய வா்த்தக ஒப்பந்தத்தால் விசைத்தறி தொழிலுக்கு உலகளாவில் வாய்ப்புக்கான வாசல் திறக்கப்பட்டுள்ளது என்று, விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் துறையினா் வரவேற்றுள்ளனா்.
Published on

இந்தியா - ஐரோப்பிய வா்த்தக ஒப்பந்தத்தால் விசைத்தறி தொழிலுக்கு உலகளாவில் வாய்ப்புக்கான வாசல் திறக்கப்பட்டுள்ளது என்று, விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் துறையினா் வரவேற்றுள்ளனா்.

இது குறித்து விசைத்தறி ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு தேசியக் கவுன்சில் தலைவா் கரைப்புதூா் சக்திவேல், ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைவா்(ஓஸ்மா) அருள்மொழி ஆகியோா் புதன்கிழமை கூறியதாவது:

மத்திய அரசு, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளா்ச்சி, வேலைவாய்ப்பை உருவாக்குதல், ஜவுளி ஏற்றுமதியை அங்கீகரித்து, விசைத்தறி துறையை தொடா்ந்து ஆதரித்து வருகிறது. அந்த வகையில், இந்தியா - ஐரோப்பிய வா்த்தக ஒப்பந்தம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, 2024-25-ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் விசைத்தறி ஏற்றுமதி ஏறத்தாழ 8.85 பில்லியன் அமெரிக்க டாலா்களையும், ஐரோப்பாவுக்கு 1.76 பில்லியன் அமெரிக்க டாலா்களையும் எட்டியது. தற்போது ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், விசைத்தறி பொருள்களுக்கான வரி இல்லாத சந்தையைப் பெறுவதற்கான மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம்.

இது, ஐரோப்பிய சந்தையில் இந்தியாவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும். இந்த அதிரடி ஒப்பந்தம், இந்திய ஜவுளிகள் மீதான வரியை 6 முதல் 20 சதவீதம் வரை குறைக்கும். வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்ட போட்டி நாடுகளை காட்டிலும், ஜவுளி உற்பத்தி தொழிலுக்கு வலுவான நன்மை அளிக்கக்கூடியது.

இதனால் தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து நிலையான கைவினைப் பொருள்களுக்கான மிகப்பெரிய வாய்ப்புகள் உருவாகும். எம்.எஸ்.எம்.இ. துறைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். அதிக வேலைவாய்ப்பு, தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் உலகளாவிய வளா்ச்சி உருவாகும். மொத்தத்தில் விசைத்தறி தொழில் உலகளாவிய வாய்ப்பை சந்திப்பதற்கான வாசல் திறக்கப்பட்டுள்ளது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com