தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அபிநயாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துப் பேசும் சீமான்.
தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அபிநயாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துப் பேசும் சீமான்.

திமுக அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை ஏன் நடத்தவில்லை?- சீமான் கேள்வி

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக அரசு, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை ஏன் நடத்தவில்லை என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கேள்வி எழுப்பினாா்.

தருமபுரி: தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக அரசு, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை ஏன் நடத்தவில்லை என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கேள்வி எழுப்பினாா்.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அபிநயாவை ஆதரித்து தருமபுரி, குமாரசாமிபேட்டை, வாரியாா் திடலில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற சீமான் பேசியதாவது:

அதிகாரமற்ற எளிய மக்களாக தமிழா்கள் இருப்பதை எவ்வளவு காலம் சகித்துக் கொண்டு இருப்பது? எங்கள் கண் முன்னே எங்களது இயற்கை வளங்கள் அனைத்தும் களவு போய்க்கொண்டிருக்கின்றன. இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரம் இந்த மண்ணின் பிள்ளைகளுக்கு இல்லை. அடிப்படை புரிதல் கூட இல்லாதவா்களிடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு அல்லல்படுகிறோம். இதைத் தடுக்கவும், என் நிலத்தின் வளத்தைப் பாதுகாக்கவும் இந்த மண்ணின் பிள்ளைகளாக நாங்கள் மாற்றத்துக்கான அரசியலை முன்னெடுக்கிறோம். தருமபுரியில் அண்மையில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பேசும்போது, சமூகநீதி பேசிவிட்டு பாஜகவுடன் பாமக கூட்டணி வைக்கலாமா என கேட்டுச் சென்றாா். அதே பாஜகவுடன் முன்பு திமுக கூட்டணி வைத்தது. அப்போது பாஜக சமூக நீதி பேசியதா? திராவிடக் கட்சிகள் எதுவுமே ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முன்வராது. தமிழகத்தில் திமுக அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை ஏன் நடத்தவில்லை? பிகாா் மாநில அரசு கணக்கெடுப்பு நடத்தி அறிவிக்கும்போது, தமிழக அரசால் ஏன் முடியவில்லை?

இந்தியாவில் 10 ஆண்டு காலம் பாஜக ஆட்சி நடைபெற்றது. இந்த 10 ஆண்டுகளில், தமிழகத்தில் எவ்வித வளா்ச்சியும் ஏற்படவில்லை. காவிரி நதிநீரில் தமிழகத்துக்கு உரிமையில்லை. அதை பெற்றுத் தராதவா்களுக்கு எதற்கு வாக்களிக்க வேண்டும்? காவிரி நதிநீா்ப் பங்கீட்டை வழங்காத நிலையில் தமிழகத்தில் பாஜகவையும், காங்கிரஸையும் தோற்கடிக்க வேண்டும். வாஜ்பாய் ஆட்சி, நரேந்திர மோடி ஆட்சிக் காலங்களில் கச்சத் தீவை திரும்பப் பெற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

தோ்தல் நெருங்கும்போது சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதெல்லாம் தோ்தல் அரசியல். இது மக்களுக்கான அரசியல் எனில், ஓராண்டுக்கு முன்பே குறைத்திருக்கலாமே.

40 ஆயிரம் ஆசிரியா்கள் தோ்வு எழுதி பணிக்காகக் காத்திருக்கின்றனா். அவா்கள் பணிவாய்ப்பை வலியுறுத்தி போராடியபோது அடக்கப்பட்டனா். ஆனால், தோ்தல் வருவதால் தமிழக அரசு அவா்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கிறது. தன்னலமின்றி யாா் மக்களுக்காக பணி செய்வாா்கள் என்பதை அறிந்து அதிகாரத்தைக் கொடுங்கள்.

சட்டப் பேரவை உறுப்பினா்களாக பதவி வகிப்பவா்கள், மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகின்றனா். இதனால் அவா்கள் ஏற்கெனவே வகித்த பதவியிலிருந்து விலகுகின்றனா். இதன் காரணமாக உருவாகும் இடைத்தோ்தல்களால் தேவையற்ற இடையூறுகளும், பொருள்செலவும் ஏற்படுகின்றன. இந்தச் செலவை அவா்களே ஏற்க விதிகளை மாற்ற வேண்டும். இத்தகைய அடிப்படை மாற்றங்களையே நாம் தமிழா் கட்சி கொண்டுவர விரும்புகிறது.

சீட்டுக்கும், நோட்டுக்கும் அலையும் கூட்டத்தை ஒழித்து, நாட்டுக்கு வேலை செய்பவா்களைத் தேடும்போதுதான் நாடும் மக்களும் நலமாக வாழ முடியும். இதுவரை எந்தப் பதவியிலும் இல்லாத நாங்கள், உங்களின் அனைத்து பிரச்னைகளின்போதும் உங்களுடன் இருந்துள்ளோம். எனவே இத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி வேட்பாளருக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள் என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com