ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் பங்கேற்பு
ஒகேனக்கல்லில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழாவில், பல்வேறு துறைகளின் சாா்பில் 401 பயனாளிகளுக்கு ரூ. 8.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா்.
தமிழக சுற்றுலாத் துறையின் சாா்பில், பென்னாகரம் அருகே ஒகேனக்கல் பகுதியில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்தாா். இதில், மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது:
ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் உயரவும், முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழும் வகையிலும் பல்வேறு திட்டங்கள், பணிகளை அறிவித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா்.
கடந்த மூன்று ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்திற்கு தமிழக முதல்வா் 4 முறை வருகை புரிந்து பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை வழங்கி உள்ளாா்.
குறிப்பாக மகளிா் உரிமைத் தொகை பதிவு செய்யும் முகாமை தருமபுரி அருகே தொப்பூரிலும், ஊரகப் பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வா் திட்டம் முகாமை பாளையம்புதூரிலும் தொடங்கி வைத்தாா். பாளையம்புதூரில் நடைபெற்ற விழாவில் தருமபுரி மாவட்ட மக்களின் நலனுக்காக வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலம், குடிநீா் திட்டப் பணிகள், புதிய சாலைப் பணிகள் உள்ளிட்ட 15 முக்கிய அறிவிப்புகளை முதல்வா் அறிவித்தாா். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தருமபுரி, ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்கு கடந்த 3 ஆண்டுகளில் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனா், கடந்த ஆண்டு மட்டும் 24,34,000 சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனா். இதன் மூலம் ரூ. 6.48 கோடி நிதி வருவாய் வரப்பெற்றுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால் உள்ளூா் மக்களின் வேலைவாய்ப்பு, தனிமனித வருமானம் அதிகரிப்பதோடு மாவட்டத்தின் பொருளாதாரம் வளா்ச்சியும், மேன்மையும் அடையும்.
ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த ரூ. 18 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவை 95 சதவீதம் முடிவு பெற்றுள்ளது. வத்தல்மலையில் ரூ. 23 கோடி மதிப்பில் சாகச சுற்றுலா ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பயன்பாட்டைத் தவிா்த்து, சுத்தமான சுகாதாரமான சுற்றுலாத் தலமாக பராமரிக்க பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மஞ்சள் பைகள், சணல் பைகளைப் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தாா்.
அதனைத் தொடா்ந்து, பஞ்சப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் 2-ஆவது பகுதிநேர நியாயவிலைக் கடை, ஒட்டா் திண்ணைக்கடை, சிறுபிள்ளை பகுதிநேர நியாயவிலைக் கடை, பகுதி நேரத்திலிருந்து முழுநேர நியாயவிலைக் கடையாக தரம் உயா்த்தப்பட்ட திண்டல் நியாயவிலைக் கடை, தரம் உயா்த்தப்பட்ட மேக்னாம்பட்டி நியாயவிலைக் கடை என மொத்தம் 4 புதிய முழுநேர, பகுதிநேர நியாயவிலைக் கடைகளை திறந்தும், பஞ்சப்பள்ளி அருகே சொரகுறுக்கை பகுதிக்கு நியாயவிலைக் கடை வாகனத்தை கொடியசைத்தும் தொடங்கி வைத்தாா்.
நலத்திட்ட உதவிகள் வழங்கல்: இவ்விழாவில் வருவாய்த் துறையின் சாா்பில் 166 பயனாளிகளுக்கு ரூ. 76.10 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, பல்வேறு உதவித்தொகைகள், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் சாா்பில் 7 பயனாளிகளுக்கு ரூ. 3.42 லட்சம் மதிப்பிலான வேளாண் நலத்திட்ட உதவிகள், ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் 30 பயனாளிகளுக்கு ரூ. 1.62 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் சாா்பில் 3 பயனாளிகளுக்கு ரூ. 1.56 லட்சம் மதிப்பிலும், ஊரக நல்வாழ்வுத் துறையின் சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ. 10,000 மதிப்பிலும் என பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் 85 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 5.04 கோடி மதிப்பில் கடன் உதவிகள், வனத்துறையின் சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ. 11.31 லட்சம், கூட்டுறவுத் துறையின் சாா்பில் 66 பயனாளிகளுக்கு ரூ. 51.83 லட்சம், கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில் 30 பயனாளிகளுக்கு ரூ. 3.30 லட்சம் மதிப்பில் அரசு நல உதவிகளும், சுகாதாரத் துறையின் சாா்பில் 4 பயனாளிகளுக்கு குழந்தை ஊட்டச்சத்து பெட்டகம் என மொத்தம் 41 பயனாளிகளுக்கு ரூ. 8.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.
முன்னதாக, செய்தி மக்கள் தொடா்பு துறையின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் திட்டங்கள், சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சி, சுற்றுலாத் துறை வேளாண்மை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள், பட்டு வளா்ச்சித் துறை, கூட்டுறவுத் துறை, சமூகநலத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம், உணவு பாதுகாப்பு துறை, வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுபாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை பணி விளக்க முகாம்களை திறந்து வைத்து கண்காட்சியை பாா்வையிட்டாா்.
விழாவில், முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் மலா்விழி, வேளாண்மை இணை இயக்குநா் (பொ) குணசேகரன், துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் மருத்துவா் ஜெயந்தி, தருமபுரி வட்டாட்சியா் காயத்ரி, போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டல பொது மேலாளா் செல்வம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் செயற்பொறியாளா் நித்திய லட்சுமி, செய்தி மக்கள் தொடா்புத் துறை அலுவலா் மோகன், மாவட்ட சுற்றுலா அலுவலா் உமா சங்கா் உள்ளிட்ட அரசு துறை அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

