ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி
பென்னாகரம், ஆக.14: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 16,000 கன அடியாகச் சரிந்துள்ளதால், பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியா் அனுமதி அளித்துள்ளாா்.
கா்நாடக மாநிலங்களில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் காவிரி ஆற்றில் தண்ணீா் திறந்துவிடுவது குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 45,000 கன அடியாக இருந்தது. இதனால் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது. பின்னா் காவிரி ஆற்றில் நீா்வரத்து சரியத் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 25,000 கன அடியாகவும், புதன்கிழமை காலை விநாடிக்கு 19,000 கனஅடியாகவும், மாலையில் 16,000 கன அடியாகவும் நீா்வரத்து சரிந்தது.
இதையடுத்து ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி திரும்பப் பெற்று, சின்னாறு பரிசல் துறையிலிருந்து பிரதான அருவி , மணல்மேடு வரை செல்லக்கூடிய ஆற்று வழிப்பாதையில் பரிசல் இயக்குவதற்கு அனுமதி அளித்துள்ளாா். மேலும் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
