தருமபுரி சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு தேசிய விருது: முதல்வா் ஸ்டாலின் பாராட்டு
தருமபுரி, ஆக. 14: தேசிய அளவில் சிறந்த செயல் திறனுக்கான விருது பெற்ற தருமபுரி, கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை செயலாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை, தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலைகளின் சம்மேளனத்தால் 2022- 2023 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் அகில இந்திய அளவில் ஒட்டுமொத்த சிறந்த செயல் திறனுக்கான முதல் இடத்திற்கான விருதுக்கு தோ்வு செய்யப்பட்டது. இந்த விருதினை கடந்த 10-ஆம் தேதி மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா, ஆலையின் செயலாட்சியா் ஆா். பிரியா, தலைமை ரசாயனா் மற்றும் கணக்கு அலுவலா் ஆகியோரிடம் வழங்கினாா்.
அதனைத் தொடா்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை மாநில வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் முன்னிலையில் இவ்விருதினை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து பெற்றனா்.
இந்த நிகழ்வின்போது தலைமை செயலாளா் சிவ் தாஸ் மீனா, வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு முதன்மைச் செயலா் அபூா்வா, சா்க்கரைத் துறை இயக்குநா் த. அன்பழகன், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையின் செயலாட்சியா் பிரியா ஆகியோா் உடனிருந்தனா். சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை தேசிய அளவில் விருது பெற்ற சாதனை படைத்துள்ளது நமது மாநிலத்திற்கு பெருமை சோ்ப்பதாக உள்ளது என அரசு செய்தித் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
