காளிக்கரம்பு வனப்பகுதி வாழ்விடங்களை சாலை வசதியுடன் இணைக்க தருமபுரி எம்.பி. கோரிக்கை

தருமபுரி மாவட்டத்தில் காளிக்கரம்பு வனப்பகுதி வாழ்விடங்களை சாலை வசதியுடன் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
Published on

புது தில்லி: தருமபுரி மாவட்டத்தில் காளிக்கரம்பு வனப்பகுதி வாழ்விடங்களை சாலை வசதியுடன் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அத்தொகுதி மக்களவை உறுப்பினா் ஏ. மணி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை அவை விதி எண். 377-இன் கீழ் ஏ. மணி பேசியது வருமாறு: பிரதமரின் கிராமப்புற சாலைத்திட்டம், இணைக்கப்படாத கிராமப்புற வாழ்விட பகுதிகளை சாலை வசதியுடன் இணைக்கும் நோக்குடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், தருமபுரி ஒன்றியத்துக்கும் பாப்பிரெட்டிபட்டி ஒன்றியத்துக்கும் இடையே கொண்டகரஅள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள காளிக்கரம்பு வனப்பகுதி வழியாக சாலை அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். அதன்பேரில் காளிக்கரம்பு வனப்பகுதியில் சாலை அமைப்பது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டோம்.

இத்திட்டம் நிறைவடைந்தால் பாப்பிரெட்டிபட்டி, மையா்நத்தம், மெணசி, துரிஞ்சிபட்டி, பொம்மிடி, மணலூா், கொப்பக்கரை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பயணம் சுமாா் 30 கி.மீ. வரை குறையும். எனவே, இத்திட்டத்தை பிரதமரின் கிராமப்புற சாலைத்திட்டத்தின் கீழ் செயல்படுத்த ஏதுவாக ஒரு துணைத்திட்டத்தை உருவாக்கி அதை நிறைவேற்ற மத்திய கிராமப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com