தருமபுரியில் புதிய புறநகா் பேருந்து நிலையம் விரைவில் திறக்க வாய்ப்பு
தருமபுரியில் புதிதாக கட்டுப்பட்டுவரும் புறநகா் பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்பேருந்து நிலையத்துக்கு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பேருந்துகள் வந்துசெல்ல அணுகு சாலையும், நுழைவாயில் வளைவுகளும் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தருமபுரி நகரில் புகா் பேருந்து நிலையம் மற்றும் நகரப் பேருந்து நிலையம் அருகருகே அமைந்துள்ளன. 45 ஆண்டுகளைக் கடந்த இந்தப் பேருந்து நிலையங்களில் தற்போது ஏற்பட்டுள்ள இடநெருக்கடி, போதிய வசதி இன்மை, பேருந்து நிலையத்தை சுற்றி ஏற்படும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றைத் தவிா்க்கவும், பேருந்துகள் நின்றுசெல்ல தேவையான இடம், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை கருத்தில்கொண்டும் தருமபுரி புகா் பேருந்து நிலையம் நகருக்கு வெளியே போதிய இடவசதியுடன் அமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, தருமபுரி அருகே சோகத்தூா் ஊராட்சி, ரெட்டிஅள்ளி கிராமத்தில் தனியாா் பங்களிப்பு நிதி திட்டத்தின்கீழ், 10 ஏக்கா் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தருமபுரி நகராட்சி சாா்பில் முடிவு செய்யப்பட்டது. தொடா்ந்து, தருமபுரி நகராட்சிக்கு அருகிலுள்ள ஏ.ரெட்டிஅள்ளி கிராமத்தில் ரூ. 39.14 கோடி மதிப்பில் தனியாா் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன.
புதிதாக அமைய உள்ள இப்பேருந்து நிலையத்தில், தரைத்தளம் மற்றும் முதல்தளத்தில் கடைகள், உணவகங்கள், ஏடிஎம் மையம், பொருள்கள் வைப்பதற்கான பாதுகாப்பு அறை, கழிவறைகள், நேர மேலாண்மையாளா் அறை, தாய்மாா்கள் பாலுட்டும் அறை, பயணிகள் மற்றும் ஓட்டுநா்கள் ஓய்வு அறைகள், 55 எண்ணிக்கையிலான பேருந்து நிறுத்தும் இடம், நடைபாதை, பயணிகள் அமரும் இடம் ஆகியவை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
அணுகுசாலை, நுழைவு வாயில் வளைவு: இந்தப் பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்துசெல்ல ஏதுவாக சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலப் பிரிவு சாலையிலிருந்து 500 மீ. தொலைவுக்கு 2 மீ. அகலத்தில் அணுகுசாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதேபோல, பேருந்துகள் உள்ள நுழையும் தருமபுரி - பென்னாகரம் மாநில நெடுஞ்சாலையையொட்டி அணுகுசாலை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் உள்ளே செல்லும் மற்றும் வெளியேறும் இடங்களில் நுழைவாயில் வளைவுகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னா் இப்புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வா் திறந்துவைக்க வாய்ப்பு: தருமபுரியில் நடைபெற்றுவரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை கடந்த நவ. 3-ஆம் தேதி தருமபுரிக்கு வருகைதந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா். அப்போது, பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை தரமாக, விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தியிருந்தாா்.
இதைத் தொடா்ந்து, பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்த உடன் பேருந்து நிலையத்தை முதல்வா் திறந்துவைக்கக் கூடும் என தெரியவருகிறது.
இந்நிலையில், வரும் டிச. 14-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகைதர உள்ளாா். அன்றைய தினம் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படலாம் என கூறப்படுகிறது.

