பாலக்கோடு அருகே இரு இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு: தேசிய ஆதிதிராவிடா் ஆணையக் குழுவினா் விசாரணை
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே இரு ஆதிதிராவிட சமூகத்தைச் சோ்ந்த இளைஞா்கள் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக தேசிய ஆதிதிராவிடா் ஆணையக் குழுவினா் புதன்கிழமை பாலக்கோட்டில் விசாரணை மேற்கொண்டனா்.
பாலக்கோடு அருகே உள்ள சொன்னம்பட்டியைச் சோ்ந்த சுனில்குமாா் (19), முருகன் (20) ஆகியோா் கடந்த நவம்பா் 26 ஆம் தேதி இரவு, பாலக்கோடு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சிக்கஆரதன அள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இருவரும் மா்மமான முறையில் உயிரிழந்தனா். இருவரும் ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள். இருவரது உயிரிழப்பிலும் சந்தேகம் உள்ளதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அவா்களின் உறவினா்கள் சில நாள்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அதேபோல, இருவரது சடலங்கைü வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வந்த உறவினா்கள், நான்கு நாள்களுக்கு பிறகு கடந்த நவ. 29-ஆம் தேதி போலீஸாரின் சமரசத்துக்கு பின்பு சடலங்களை பெற்றுச் சென்றனா். அதேபோல, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் இளைஞா்களின் உறவினா்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்த தகவலின் பேரில், தேசிய ஆதிதிராவிடா் ஆணையத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி பிரிவு இயக்குநா் ரவிவா்மா தலைமையில் அலுவலா்கள் லிஸ்டா், சுரேஷ் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் பாலக்கோடு பகுதியில் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
அக்குழுவினா், சம்பவம் நோ்ந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பின்னா், உயிரிழந்த இளைஞா்களின் பெற்றோா், உறவினா்கள், நண்பா்கள் மற்றும் வழக்குப் பதிவு செய்த காவல் நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, இளைஞா்களின் உறவினா்கள், இது திட்டமிட்டு நடந்த கொலையாக இருக்கலாம். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து அனைத்து தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்ட பின்பு அக்குழுவினா் அங்கிருந்து திரும்பிச் சென்றனா்.
விசாரணையின் போது, தருமபுரி சாா்ஆட்சியா் இரா. காயத்ரி, டி.எஸ்.பி.க்கள் ராஜசுந்தா், சிவராமன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி. சூா்யா, ஆய்வாளா்கள் பாலசுந்தரம், சிவசங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
