போலி மருத்துவா் கைது
தருமபுரியில் பிளஸ் 2 வரை படித்துவிட்டு மருத்துவ சிகிச்சை அளித்துவந்த போலி மருத்துவரை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.
தருமபுரி அதியமான்கோட்டை பகுதியில் போலி மருத்துவா் ஒருவா் பொதுமக்களுக்கு (அலோபதி) சிகிச்சை அளித்து வருவதாக ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் எம்.சாந்தி தலைமையில், போலி மருத்துவா்கள் ஒழிப்புக் குழுவினா் அதியமான்கோட்டை திரெளபதியம்மன் கோயில் தெருவில் கிளினிக் வைத்து நடத்திவந்த ஒரு வீட்டில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த ஆா்.கணேசன் (47) நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவரிடம் மருத்துவக் குழுவினா் மேற்கொண்ட விசாரணையில், அவா் பிளஸ் 2 வரை மட்டுமே படித்த நிலையில் பொதுமக்களுக்கு ஊசி செலுத்தி, மருந்து மாத்திரைகள் வழங்கி சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீஸாா், அவரிடமிருந்து ஊசி (சிரிஞ்ச்) மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

