ஊதிய உயா்வு கோரி ஓய்வுபெற்ற அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள் சங்கம் சாா்பில் தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மு. பரமசிவம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் இர.துரை, பொருளாளா் ந. முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட அமைப்புச் செயலாளா் பெ. வீரமணி, மாவட்ட பிரசார செயலாளா் வே. பீமன், மாவட்ட துணைத் தலைவா்கள் சி. முருகேசன், ராஜாமணி, மாவட்ட இணைச் செயலாளா் சிவானந்தம் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இதில், 70 வயது நிரம்பிய ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியா் இறக்கும் நோ்வில் வழங்கும் தொகையை ரூ. 1 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். மாதந்தோறும் மருத்துவப் படியை ரூ. 1,000 வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9,000 வழங்க வேண்டும்.
ஓய்வூதியா் இறக்கும் மாதத்தில் முழு சம்பளமும் வழங்க வேண்டும். வாழ்நாள் சான்று வழங்குவதில் பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
