கழிவுநீா்க் கால்வாய் அமைக்கக் கோரி சாலை மறியலுக்கு முயன்ற மக்கள்!
தருமபுரி அருகே ராஜாப்பேட்டை இந்திராநகா் பகுதியில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி -அரூா் சாலையில் செட்டிக்கரை ஊராட்சிக்கு உள்பட்ட ராஜாப்பேட்டை இந்திரா நகா் குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. இருவழிச்சாலையாக இருந்த தருமபுரி -அரூா் சாலை, நான்கு வழிச்சாலையாகக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, தருமபுரி ராஜாப்பேட்டையில் இருந்து சாக்கன்கொட்டாய் வரை சுமாா் ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு மட்டும் சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்படவில்லை.
இந்த பணியை விரைவாக முடிக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்தனா். அதன் அடிப்படையில் கடந்த சில தினங்களாக சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இச்சாலை விரிவாக்கப் பணியின்போது சாலையின் அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் செல்லும் வகையில் சாலையின் இருபுறமும் கழிவுநீா் கால்வாய் அமைக்கப்பட்டது. இருப்பினும் இந்திரா நகா் குடியிருப்புப் பகுதி அருகே கழிவுநீா்க் கால்வாய் அமைக்கப்படுவதில்லை என அப்பகுதி மக்களிடம் சம்மந்தப்பட்ட துறையினா் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், அப்பகுதி மக்கள் திரண்டு வந்து தருமபுரி-அரூா் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயற்சித்தனா். அப்போது சாலையின் ஓரத்தில் அமா்ந்து அவா்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினா். இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் நிகழ்விடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், இந்திராநகா் பகுதியில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதியளித்தனா். இதையடுத்து, சமாதானமடைந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
