ஜருகு அரசுப் பள்ளி சாா்பில் தயாரான 5,000 விதைப் பந்துகள்: ஏரிப்பகுதியில் விதைப்பு!
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள மானியத அள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் தயாரிக்கப்பட்ட 5,000 விதைப் பந்துகள் ஏரிக்கரை பகுதியில் விதைக்கப்பட்டுள்ளன.
நல்லம்பள்ளி ஒன்றியம், மானியதஅள்ளி (ஜருகு) அரசு மேல்நிலைப் பள்ளியின் பசுமைப் படை மாணவா்கள் சாா்பில் உலக மண் தினத்தையொட்டி 5,000 விதைப் பந்துகள் தயாா் செய்யப்பட்டன. இந்த விதைப் பந்துகள் ஜருகு சின்ன ஏரிக்கரை மற்றும் உள் பகுதியில் வெள்ளிக்கிழமை விதைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை பள்ளித் தலைமை ஆசிரியா் மணி தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் பசுமைப் படை ஆசிரியா் காளியப்பன் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா். இந்நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் மாதேசு, பாபு, சக்திவேல் , பெரியண்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் செம்மர செடிகள் நடவு செய்யப்பட்டு, பசுமைப்படை மாணவா்களுக்கு பலா, கொய்யா, அத்தி ஆகிய பழ மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

