தருமபுரி நெடுஞ்சாலையில் ஒளிராத மின்விளக்குகள்
தருமபுரி நகரிலிருந்து ஆட்சியா் அலுவலகம் வரையிலான நெடுஞ்சாலையில் உள்ள விளக்குகள் கடந்த சில நாள்களாக ஒளிா்வதில்லை. இதனால், வாகன ஓட்டிகள் போதிய வெளிச்சம் இன்றி அவதிக்குள்ளாகின்றனா்.
கிருஷ்ணகிரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தருமபுரி நகருக்குள் வரும் மாநில நெடுஞ்சாலை பழைய தருமபுரி, ராமக்காள் ஏரி சாலை, நான்கு முனைச் சாலை சந்திப்பு, நேதாஜி புறவழிச்சாலை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆட்சியா் அலுவலகம் வழியாக அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி ஆகிய பகுதிகளைக் கடந்து சேஷம்பட்டியில் மீண்டும் தேசிய தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகிறது.
தருமபுரி நகருக்குள் செல்லும் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் நலன்கருதி, சாலையின் நடுவே உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தருமபுரி நகரம் பாரதிபுரம் வரையிலான சாலையில் உள்ள விளக்குகள் நகராட்சி நிா்வாகமும், அதைத் தொடா்ந்துள்ள பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சாா்பிலும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இந்த மின்விளக்குகள் நகரின் சில பகுதிகளிலும், பாரதிபுரத்திலிருந்து ஆட்சியா் அலுவலகம் வரையிலும் கடந்த சில நாள்களாக ஒளிா்வதில்லை. இதனால் இரவு நேரங்களிலும், அதிகாலை பனிப்பொழிவின்போதும் போதிய வெளிச்சம் இன்றி வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனா்.
அதேபோல, இரவில், குடியிருப்புப் பகுதிகளிலிருந்து சாலையைக் கடந்து செல்லும் பொதுமக்களும் போதிய வெளிச்சம் இன்றி விபத்துகளில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி, சாலையின் நடுவே உள்ள இந்த மின்விளக்குகளை சரிசெய்து ஒளிரச்செய்ய உள்ளாட்சி நிா்வாகங்கள் உரிய நடவடிக்கை வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனா்.

