தருமபுரியில் ரூ.10,000 லஞ்சம் பெற்ற அரசு பெண் வழக்குரைஞா் கைது!

போக்ஸோ வழக்கை நடத்துவதற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற அரசு சிறப்பு பெண் வழக்குரைஞரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

தருமபுரியில் போக்ஸோ வழக்கை நடத்துவதற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற அரசு சிறப்பு பெண் வழக்குரைஞரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். இதுதொடா்பாக போக்ஸோ சட்டப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடா்பான வழக்கு தருமபுரி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமிக்காக அரசு சாா்பில் தருமபுரி, பென்னாகரம் சாலையைச் சோ்ந்த அரசு வழக்குரைஞா் வி. கல்பனா ஆஜராகி வந்தாா். இந்நிலையில் சிறுமியின் தந்தையிடம் வழக்கில் ஆஜராவதற்காக ரூ. 15 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று அவா் கேட்டுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சிறுமியின் தந்தை இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் செய்தாா்.

இதையடுத்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் ஆலோசனைப்படி ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டதால் முதல் தவணையாக ரூ. 10 ஆயிரம் ரசாயனம் தடவிய நோட்டுகளை சிறுமியின் தந்தை பென்னாகரம் சாலையில் உள்ள அரசு வழக்குரைஞரின் வீட்டில் சென்று கொடுத்துள்ளாா்.

அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பெருமாள் மற்றும் போலீஸாா், அரசு வழக்குரைஞா் கல்பனாவை கைது செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com