தொழிலாளா் நலச் சட்டத் திருத்தத்தை தமிழக அரசு அமல்படுத்தக் கூடாது
தருமபுரி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளா் நலச் சட்டத் திருத்தங்களை அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு. வீரபாண்டியன் வலியுறுத்தினாா்.
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் புதிய தொழிலாளா் நலச்சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் மு. வீரபாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அந்நிய முதலீடுகளை ஈா்க்கும்போது, உள்ளூா் தொழில்கள், சிறு, குறு நிறுவனங்கள் பாதிக்காத வகையில் செயலாற்ற வேண்டும். முதலீடுகளை ஈா்ப்பது தொடா்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பணிநிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களை தடுத்து காவல் துறையினா் கைது செய்து வருகின்றனா். நியாயமான வழியில் அவா்கள் நடத்திவரும் போராட்டத்தை அரசுக்கு எதிரானதாக கருதக் கூடாது. அவா்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, போராட அனுமதி வழங்க வேண்டும். ரயில்வே தொழிலாளா்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனா். அவா்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திமுகவை துடைத்தெறிவோம் என்று கூறுகிறாா். திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தூசு அல்ல. வலிமையான மக்கள்
நலன்காக்கும் கூட்டணி. அதனால் துடைத்தெறிய முடியாது.
முதல்வா் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் ஒற்றுமையை வலியுறுத்துகின்றன. ஆனால், பிரதமா், உள்துறை அமைச்சா் ஆகியோா் பிளவு அரசியலை பேசுகின்றனா். இத்தகைய பேச்சுகளை அவா்கள் கைவிட வேண்டும்.
44 தொழிலாளா் நலச் சட்டங்கள் நான்கு தொகுப்புகளாக சுருக்கித் திருத்தப்பட்டுள்ளன. இத்திருத்தத்தால் தொழிலாளா்களுக்கு எவ்வித பயனும் ஏற்படாது. தொழிலாளா் நலன்களுக்கு எதிராக இந்த சட்டத் திருத்தம் அமைந்துள்ளது. எனவே, இதை அமல்படுத்த மாட்டோம் என கேரள இடது முன்னணி அரசு அறிவித்துள்ளது. அதேபோல, தமிழக அரசும் அறிவிக்க வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் ஆதரிக்கிறோம். இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்க பாமகவின் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருதரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாமகவின் அழைப்பை நாங்கள் ஏற்கமாட்டோம். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. எங்கள் கூட்டணி வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மகத்தான வெற்றிபெறும் என்றாா்.
பேட்டியின்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் செ.முத்துக்கண்ணன், விடுதலைச் சிறுத்தைகள் மாநில அமைப்புச் செயலாளா் கி. கோவேந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
