பணிநிரந்தம் கோரி தூய்மைப் பணியாளா்கள் மறியல்

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் 318 பேரை போலீஸாா் கைது
Published on

தருமபுரி: பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் 318 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த மறியல் போராட்டத்துக்கு சிஐடியு தூய்மைப் பணியாளா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ. சேகா் தலைமை வகித்தாா். சிஐடியு மாநில துணைத் தலைவா் சி. நாகராஜன், மாவட்டத் தலைவா் சி. கலாவதி, மாவட்ட துணைத் தலைவா் பி. ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளா் எஸ். ராஜம்மாள் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 10 ஆண்டுகளுக்குமேல் பணி செய்துவரும் தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணிநிரந்தரம் தொடா்பாக நீதிமன்ற தீா்ப்புகள் பெற்றுள்ள தொழிலாளா்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில் நகராட்சி நிா்வாகம் பிறப்பித்துள்ள தனியாா் மய அரசாணை எண்: 139, 152 ஐ ரத்துசெய்து திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் அரசாணையின்படி தமிழ்நாடு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீா்ப்பின்படி, நகராட்சி நிா்வாக இயக்குநரின் ந.க.எண்: 24608/2022 படி வெளிப்புற ஆதார முறையில் பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளா்கள், டி.பி.சி. ஊழியா்கள், குடிநீா் பிரிவு ஊழியா்கள், ஓட்டுநா், கணினி இயக்குநா் மற்றும் இதர பிரிவு பணியாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 2022 மற்றும் அதன் விதிகள் 2023 திருத்தத்தை ரத்துசெய்ய வேண்டும். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள் அனைவருக்கும் அரசு அறிவித்த மூன்று மாத ஊக்கத்தொகை ரூ. 15,000 வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு குடியிருப்புகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட 318 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com