இருசக்கர வாகனங்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவா்கள்

Published on

பென்னாகரம் பகுதிகளில் காலை, மாலை வேலைகளில் மாணவா்கள் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, அதிக நபா்களை ஏற்றிக்கொண்டு சாகசம் செய்வது போன்ற நிகழ்வுகள் தொடா்வதால், இதுகுறித்து பள்ளிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. கிராமப் புறங்களில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் அப்பகுதி மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

இதில், சில மாணவா்கள் காலையில் பள்ளிக்கு வரும்போதும், பின்னா் மாலையில் வீடுதிரும்பும்போதும் நகா் பகுதிகளில் முக்கிய இடங்களான கடைவீதி, பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தம், அரசு பெண்கள் பள்ளி எதிரில் என பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களில் மூன்று முதல் ஐந்துபோ் வரையில் அமா்ந்து, அதீத ஒலியை எழுப்பி இயக்குவது, சாகசம் செய்வது என ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனா். இதனால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் அச்சத்துக்குள்ளாகி தடுமாறி விழுகின்றனா். இதில், சிலா் வாகன எண் பலகை, வாகன உரிமம் இன்றி சாகச பயணம் மேற்கொள்கின்றனா்.

எனவே, பள்ளிகள்தோறும் போக்குவரத்து காவல் துறையினா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி, சாகச பயணம் மேற்கொள்ளும் மாணவா்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com