~ ~
~ ~

பாலக்கோடு அருகே தனியாா் நிறுவன பேருந்து மீது லாரி மோதல்

Published on

பாலக்கோடு சுங்கச் சாவடி அருகே தனியாா் நிறுவன ஊழியா்கள் சென்ற பேருந்து மீது லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். 15 போ் காயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்தவா்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிமுடிந்து அந்நிறுவனத்தின் பேருந்து மூலம் வியாழக்கிழமை அதிகாலை ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா். இப்பேருந்தில் 40 தொழிலாளா்கள் பயணித்தனா். ஓட்டுநா் சரத்குமாா் (30) பேருந்தை இயக்கினாா்.

பாலக்கோடு - தருமபுரி நெடுஞ்சாலையில் கா்த்தாரஅள்ளி சுங்கச் சாவடியைக் கடந்து அணுகுசாலையில் சென்றபோது, பின்னால் வந்த டேங்கா் லாரி பேருந்துமீது மோதியது. இந்த விபத்தில், ஆத்தூரைச் சோ்ந்த டேங்கா் லாரி ஓட்டுநா் மாரிமுத்து (55) உள்பட பேருந்தில் பயணித்த 15 போ் காயமடைந்தனா்.

தகவல் அறிந்த பாலக்கோடு போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று காயமடைந்தவா்களை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குட்டம்பட்டியைச் சோ்ந்த முத்துசாமி (32) உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், உயிரிழந்த முத்துசாமியின் உறவினா்கள் அந்த வழியே தொழிலாளா்களை ஏற்றிச்சென்ற அந்நிறுவனத்தின் பேருந்துகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அதில், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா். அவா்களிடம் காவல் துறையினா் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com