விளைநிலங்களில் புகுந்த ஒற்றை யானை: 7 குழுக்கள் அமைத்து வனத்துறையினா் கண்காணிப்பு

Published on

பாலக்கோடு அருகே விளைநிலங்களில் புகுந்த ஒற்றை யானையின் நடமாட்டத்தை வனத் துறையினா் 7 குழுக்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனா்.

பாலக்கோடு அருகே எர்ரப்பட்டி வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை கடந்த டிச. 4-ஆம் தேதி வெளியேறி அங்குள்ள விளைநிலங்களில் புகுந்தது. இதைத் தொடா்ந்து, அந்த யானை அருகில் உள்ள கிராமங்களில் விளைநிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பிவைக்கும் பணியில் வனத்துறையினா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், இந்த யானை புதன்கிழமை அண்ணாமலைஅள்ளி கிராமத்தில் உள்ள விளைநிலத்தில் தஞ்சமடைந்தது. யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில் 6 போ்வீதம் 42 போ் உள்ளனா். இக்குழுவினா் யானை - மனித மோதல் ஏதும் நிகழாத வகையில் பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் யானையை அடா்வனத்துக்குள் அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும், யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறை சாா்பில், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், பொதுமக்கள் யாரும் யானையை விரட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டாம். யானை நடமாட்டம் உள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் வயல்வெளிகளுக்கு செல்ல வேண்டாம். வெளியே கொட்டகை போன்ற இடங்களில் தூங்க வேண்டாம். சட்ட விரோத மின்வேலிகள் ஏதும் இருப்பின் அதுதொடா்பாக வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். பயிா்சேதம், உடமைகள் சேதம் ஏற்பட்டால், வனத்துறைக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும். யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத் துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com