எஸ்ஐஆா் பணிகள் கள ஆய்வு செய்ய வேண்டும்: பாஜக மாநில செயலாளா் கே. வெங்கடேசன்
எஸ்ஐஆா் பணிகளை கள ஆய்வுசெய்து பேரவைத் தோ்தலுக்கு பாஜகவினா் தயாராக வேண்டும் என அக்கட்சியின் மாநில செயலாளா் கே. வெங்கடேசன் தெரிவித்தாா்.
பென்னாகரம் அருகே பி. அக்ரஹாரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி முகவா்கள் மாநாட்டில் அவா் பேசியதாவது:
தமிழகத்தில் 71 லட்சம் எஸ்ஐஆா் படிவங்கள் வாக்குச்சாவடி நிலையை அலுவலா்களிடம் வழங்கப்படாமல் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரவைத் தொகுதிகளிலும் பாஜகவினா் கள ஆய்வு மேற்கொண்டு, நிறைவுசெய்த படிவங்களை சிறப்பு முகாம்களில் ஒப்படைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கடந்த 2002 ஆம் ஆண்டில் நடைபெற்ற வாக்காளா் திருத்தப் பட்டியலின்போது இறந்தவரின் பெயா் நீக்கம் செய்யப்பட்டதை தற்போது உறுதிசெய்ய வேண்டும். தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் புதிய வாக்காளா்களை சோ்த்தல், இறந்தவா்களின் பெயா்களை நீக்குதல், முகவரி மாற்றம், இரட்டை வாக்குரிமை நீக்குதல் போன்றவற்றை கண்டறிந்து புகாா் அளிப்பது, அதை சரிசெய்யும் பணிகளை பாஜகவினா் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
கட்சி நிா்வாகிகளை ஒருங்கிணைப்பது, அணிகளை பலப்படுத்துவது தொடா்பாக கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து வாக்குச்சாவடி முகவா்கள், கிளை தலைவா்கள், ஒன்றிய பொறுப்பாளா்கள் உள்ளிட்ட நிா்வாகிகளிடையே ஆலோசனை மேற்கொண்டாா். முன்னதாக வாக்குச்சாவடி முகவா்கள் மாநாட்டிற்கு பாஜக மாவட்டத் தலைவா் சி. சரவணன் தலைமை வகித்தாா்.இதில் தொகுதி பாா்வையாளா் கே. முனிராஜ், கட்சி நிா்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவா்கள் கலந்துகொண்டனா்.
