சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
தருமபுரியில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து, மூளைச்சாவு ஏற்பட்ட சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.
தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய், மேலாண்டஹள்ளியைச் சோ்ந்தவா் சம்பத் மகன் பரமசிவம் (16), இவா் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி இரவு பரமசிவம் தனது நண்பா்கள் மூவருடன் இருசக்கர வாகனத்தில் நாயக்கன்கொட்டாயை நோக்கி சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, மேலாண்டஹள்ளி மயானம் அருகே அவா்கள் சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் பரமசிவம் படுகாயம் அடைந்தாா். மயக்க நிலையில் இருந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரமசிவம் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவா்கள் தொடா்ந்து சிகிச்சை அளித்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருப்பதை மருத்துவா்கள் உறுதிசெய்தனா்.
இதையடுத்து, சிறுவனின் உடல் உறுப்புகளை மருத்துவமனைக்கு தானம் செய்வதாக பெற்றோா் ஒப்புதல் தெரிவித்தனா். அதன்பிறகு சிறுவனின் கண்கள், சிறுநீரகம், கல்லீரல், கணையம், சிறுகுடல் ஆகிவை தானமாக பெறப்பட்டன.
இந்த உடல் உறுப்புகள் அனைத்தும் சென்னை, சேலம், ஈரோடு, கோவை மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. தொடா்ந்து சிறுவனின் உடலுக்கு அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் அஞ்சலி செலுத்தினா். அதன்பிறகு சிறுவனின் உடல் அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

