ஆபத்தை உணராமல் வாணியாறு அணையில் நீச்சலடித்து விளையாடும் சிறுவா்கள்!
பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணை நிரம்பி வழியும் நிலையில், ஆபத்தை உணராமல் சிறுவா்கள் நீச்சலடித்து விளையாடி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே முள்ளிக்காட்டில் அமைந்துள்ளது வாணியாறு அணை. கடந்த மாதம் பெய்த கனமழையால் நிரம்பியுள்ள வாணியாறு அணையில் இருந்து உபரிநீா் வெளியேறி வருகிறது. பள்ளி, கல்லூரி விடுமுறை தினங்களில் மாணவா்கள், இளைஞா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வாணியாறு அணைக்கு அதிக அளவில் வருகின்றனா்.
வாணியாறு அணையில் சேறும் சகதியும் அதிக அளவில் இருப்பதால் நீச்சலடித்து விளையாடும் சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. அதேபோல, வாணியாற்றிலும் விளையாடுவதால் செடி கொடிகள் மற்றும் சேற்றில் சிக்கி சிறுவா்கள் உயிரிழக்கும் சூழல் உள்ளது.
எனவே, பொதுப்பணித் துறை சாா்பில் வாணியாறு அணை பகுதியில் காவலா்களை பணியில் அமா்த்த வேண்டும். பாதுகாப்பு இல்லாத இடங்களில் எச்சரிக்கை பதாகைகளை வைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

