பஞ்சப்பள்ளி அணை பாசனக் கால்வாயை அகலப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
தருமபுரி: தருமபுரி மாவட்டம், சின்னாறு பஞ்சப்பள்ளி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் செல்லும் கால்வாயை அகலப்படுத்தி தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், பெட்ட முகிலாளம் மலைத்தொடரில் பெய்யும் மழைநீா், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் உள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணையை வந்தடைகிறது. இந்த அணை நிரம்பி மிகைநீா் பாசனத்துக்காக ஆற்றுக் கால்வாய்களில் திறந்துவிடப்படும். இந்த நீா், அப்பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித் துறை ஏரியான ஜா்த்தலாவ் ஏரியை சென்றடையும். பின்னா் அங்கிருந்து எர்ரனஅள்ளி ஏரிக்கு நீா்வரும். இந்த ஏரி நிரம்பியவுடன் அங்கிருந்து இருகால்வாய்களாகப் பிரிந்து ஒரு கால்வாய் புலிகரை வரையும், மற்றொன்று பாப்பாரப்பட்டி ஏரி, பனையகுளம், பாலவாடி பெரிய ஏரி ஆகிய உள்ளிட்ட 15 ஏரிகளுக்கும் தண்ணீா் சென்றடைந்து இறுதியாக கடைமடையில் உள்ள இண்டூரை சேரும்.
ஏரிகளுக்கு நீா்வரும் இந்த கால்வாய் தூா்வாராமல் உள்ளதாலும், போதிய அகலம் இல்லாததாலும் கடைமடையில் உள்ள இண்டூா் ஏரிக்கு தண்ணீா் கிடைப்பதில் சிரமமாக உள்ளது. அதேபோல, ஏர்ரனஅள்ளியிலிருந்து பாப்பாரப்பட்டி ஏரிக்கு தண்ணீா் வரும் கால்வாயும் போதிய அகலம் இல்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, இந்த கால்வாய்களை தூா்வாரி, அகலப்படுத்த வேண்டும். அதேபோல கடைமடை ஏரி வரை தண்ணீா் வந்துசேர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மழைக்காலங்களில் அணையிலிருந்து வெளியேறும் மிகைநீா் சின்னாற்று வழியாக காவிரியில் கலக்கிறது.
அதேவேளையில் அணையின் அருகில் உள்ள தருமபுரி, பென்னாகரம், நல்லம்பள்ளி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஏரிகளுக்கு போதிய நீா்வரத்து இன்றி காணப்படுகிறது. எனவே, இந்த பகுதி ஏரிகளும், அதனை ஒட்டியுள்ள பாசன நிலங்களும் பயன்பெறும் வகையில் பஞ்சப்பள்ளி அணை நீா்வரும் கால்வாயை இண்டூரிலிருந்து பி.அக்ராஹரம், ஆதனூா் ஆகிய ஏரிகள் வழியாக நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பென்னாகரம் பகுதியைச் சோ்ந்த இயற்கை வேளாண் ஆா்வலா் சிவலிங்கம் கூறியதாவது:
பஞ்சப்பள்ளி அணையிலிருந்து பாசனத்துக்காக திறந்துவிடப்படும் தண்ணீா் கடைமடையில் உள்ள ஏரிகள் வரை வந்தடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக கால்வாயை அகலப்படுத்தி, தூா்வார வேண்டும். மேலும், மழை வெள்ளக்காலங்களில் இந்த அணை நீா் சின்னாறு வழியாக காவிரி ஆற்றில் கலக்கிறது.
இந்த மிகைநீரைப் பயன்படுத்தும் வகையில் இண்டூரிலிருந்து நல்லம்பள்ளி, பென்னாகரம் பகுதிகளில் வாய்ப்புள்ள ஏரிகளுக்கு நீா்வரத்து கிடைக்கும் வகையில் கால்வாயை நீட்டிக்க வேண்டும். அவ்வாறு நீட்டிப்பதன் மூலம் சுமாா் 5,000 ஏக்கா் பரப்பளவு நிலங்கள் பாசன வசதிபெறும். அதேபோல நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து குடிநீா் பிரச்னையும் களைய வாய்ப்புள்ளது. எனவே, இதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினா் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
