பாலக்கோடு அருகே ஆட்டோ - இருசக்கர வாகனம் மோதல்: 2 போ் உயிரிழப்பு
தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே நேரிட்ட சாலை விபத்தில் 2 இளைஞா்கள் நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
பாலக்கோடு வட்டம், சி.டி.பெட்டம் அருகிலுள்ள வளையக்காரப்பட்டியைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் ராகுல் (25). பொறியியல் படித்துள்ள இவா், சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். அண்மைக்காலமாக வீட்டில் இருந்தபடி நிறுவனத்தின் பணியை மேற்கொண்டு வந்தாா். அருகிலுள்ள வேப்பிலைஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த நாகராஜ் மகன் ஹரிநாத் (25). நண்பா்களான இவா்கள் இருவரும், சனிக்கிழமை இரவு பாலக்கோடு-பெல்லுஅள்ளி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
பெல்ரம்பட்டி அருகே சென்றபோது எதிரில் வந்த ஆட்டோவும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டன. இதில் இளைஞா்கள் இருவரும் பலத்த காயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு பெல்ரம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுசென்றனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், இருவரும் வரும் வழியிலேயே உயிரிழந்ததை உறுதிசெய்தனா்.
அதைத் தொடா்ந்து இருவரின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
