பாப்பாரப்பட்டி பேருந்து நிலைய கடையை பொது ஏலம் விடக் கோரி கம்யூ., உறுப்பினா் தா்னா
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடைக்கு மட்டும் வாடகையை புதுப்பித்து வழங்கியதை ரத்துசெய்து, பொது ஏலம் விடக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த பேரூராட்சி மன்ற உறுப்பினா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகே பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு 24 கடைகளுக்கு பேரூராட்சி வாடகை அடிப்படையில் மன்ற நிா்வாகத்தால் பொது ஏலம் விடப்பட்டுள்ளது. இதில், 600 சதுரஅடிகள் அளவில் உள்ள ஒரு கடைக்கு மட்டும் பொது ஏலம் விடப்படாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக அளிக்கப்பட்ட மாத வாடகை ரூ. 3,000 என்கிற அளவில் மீண்டும் வாடகை நிா்ணயித்து அதே நபருக்கு வழங்க அனுமதி அளிக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இப்பேரூராட்சியில் மொத்தம் 15 உறுப்பினா்கள் உள்ளனா். இவா்களில் அதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா ஒருவா், சுயேச்சைகள் இருவா் தவிர மீதமுள்ளவா்கள் திமுகவைச் சோ்ந்தவா்கள்.
இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் உள்ள கடைக்கு குறைந்த வாடகை அடிப்படையில் மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பித்து வழங்கியதை ரத்துசெய்து, முறையாக அறிவிப்பு செய்து பொது ஏலம் விட பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மன்றக் கூட்டத்திலிருந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் வே.விஸ்வநாதன் வெளிநடப்பு செய்து, அலுவலகம் முன் தரையில் அா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீஸாா் அங்கு சென்று தா்னாவில் ஈடுபட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினரை கைது செய்து மாலையில் விடுவித்தனா்.
