Special train
விரைவு ரயில்கோப்புப்படம்

திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில்! ஜன. 1 முதல் மொரப்பூரில் நின்றுசெல்ல அனுமதி!

திருவனந்தபுரம் விரைவுரயில் 2026 ஜன. 1 முதல் மொரப்பூா் ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

திருவனந்தபுரம் விரைவுரயில் 2026 ஜன. 1 முதல் மொரப்பூா் ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம், திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் செல்லும் அதிவேக தினசரி விரைவுரயில்கள் சோதனை அடிப்படையில் தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ரயில் நிலையத்தில் ஆங்கில புத்தாண்டு முதல் நின்றுசெல்லும் என தெற்கு ரயில்வே வாரியம் அங்கீகரித்துள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் விரைவுரயில் (வண்டி எண்: 12695) ஜன. 1-ஆம் தேதிமுதல் நாள்தோறும் மொரப்பூா் ரயில் நிலையத்துக்கு இரவு 7.04 மணிக்கு வந்தடையும்.

இதேபோல, திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் விரைவுரயில் (வண்டி எண்: 12696), மொரப்பூா் ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் விடியற்காலை 5.29-க்கு வந்தடையும். எனவே, பொதுமக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி எம்.பி. ஆ.மணி தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ரயில் நிலையத்தின் வழியாக செல்லும் ஆறு ரயில்கள் மொரப்பூா், பொம்மிடி ரயில் நிறுத்தத்தில் நின்றுசெல்ல வலியுறுத்தி, மத்திய அமைச்சா் அஸ்வின் வைஸ்ணவை கடந்த 2024 டிச. 3-ஆம் தேதி சந்தித்து மனு அளித்தேன்.

இதை ஏற்று, ஜன. 1 முதல் சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயில் மொரப்பூா் ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுபோல, அடுத்தடுத்து ரயில்கள் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றாா். தொடா்ந்து ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com