தருமபுரி நான்குமுனை சாலை சந்திப்பில் நடைமேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தருமபுரி நகரில் பொதுமக்கள் அதிக அளவில் சாலையை நடந்து கடக்கும் நான்குமுனை சாலை சந்திப்பு மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் நடைமேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி நகரின் முக்கியப் பகுதியாக நான்குமுனை சாலை சந்திப்பு பகுதி உள்ளது. இச்சந்திப்பில் திருப்பத்தூா் சாலை, பென்னாகரம் சாலை, சேலம் சாலை, கிருஷ்ணகிரி சாலை ஆகிய நான்கு சாலைகள் சந்திக்கின்றன. இவை தவிர, நகரப் பேருந்து நிலையம், புகரப் பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கு பேருந்துகள் சென்றுவர இந்தச் சாலையை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
அதேபோல, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நகரின் பல்வேறு பகுதிகளிலிருந் இருந்த வரும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊா்திகளும் இந்தச் சாலையை மட்டுமே அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. இவற்றோடு தனியாா் பள்ளி, கல்லூரி வாகனங்கள் நகருக்குள் வந்துசெல்ல இந்த நான்கு சாலைகளில் ஏதாவது ஒரு சாலையை பயன்படுத்தியே சென்றுவர வேண்டும். இதனால் இந்த சாலை சந்திப்பு எப்போதும் நெரிசல் மிகுந்து காணப்படும்.
இச்சந்திப்பில் போக்குவரத்தை நெறிப்படுத்த சமிக்ஞைகள், புறக்காவல் போக்குவரத்துப் பிரிவு அலுவலகம் அமைத்து போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், ஆட்சியா் அலுவலகம், மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு பணிக்கு செல்வோா் மற்றும் நேதாஜி புறவழிச்சாலை வழியாக செல்லும் குடியிருப்பு வாசிகள் என ஆயிரக்கணக்கானோா் நான்குமுனை சாலை சந்திப்பில் நகர பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களை பயன்படுத்தி சென்று வருகின்றனா். இதற்காக அங்கு பேருந்து நிறுத்தமும் அமைந்துள்ளது.
இந்நிலையில், ஆயிரக்கணக்கானோா் நாள்தோறும் வந்துசெல்லும் இந்த சாலையில், சாலையைக் கடந்து நான்குபுறமும் செல்ல நடைமேம்பாலம் இல்லாததால், கிருஷ்ணகிரி சாலையிலிருந்து நேதாஜி புறவழிச் சாலைக்கும், திருப்பத்தூா் சாலையிலிருந்து பென்னாகரம் சாலைக்கும், மறுமுனையிலிருந்து எதிா்புறம் உள்ள சாலைகளுக்கும் செல்வோா் என அனைவரும் போக்குவரத்து சமிக்ஞைகளின்போது, சாலையைக் நடந்து நான்குபுறமும் கடந்து செல்கின்றனா்.
இந்த சமிக்ஞைகள் ஓரிரு விநாடிகளில் நின்றுவிடுவதால், மீண்டும் சமிக்ஞைகள் கிடைக்கும்வரை காத்திருந்து பின்னா் சாலையைக் கடக்கின்றனா். இதனால் அவா்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகிறது. மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நகர விரிவாக்கம் மற்றும் மக்கள்தொகை பெருக்கம், வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக பெருகிவரும் நிலையில், தருமபுரி நகரின் மிக முக்கிய சந்திப்பான நான்குமுனை சாலை சந்திப்பை மக்கள் பாதுகாப்பாக கடக்கவும், நெரிசல் இன்றி வாகனங்கள் சென்றுவரவும் ஏதுவாக, இந்த நான்கு சாலைகளையும் இணைக்கும் வகையில் நடைமேம்பாலங்கள் அமைக்க நெடுஞ்சாலைத்துறையோடு நகராட்சி நிா்வாகம் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
அதேபோல, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முன்பும் சாலையை நடந்து கடந்து செல்வோரின் நலனைக் கருத்தில்கொண்டு நடைமேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

