திருமல்வாடி - பிக்கிலி பெரியூா் சாலையை அகலப்படுத்த மலைக் கிராம மக்கள் கோரிக்கை

குறுகலான பாதையாக உள்ள திருமல்வாடியிலிருந்து பிக்கிலி பெரியூா் செல்லும் சாலையை அகலப்படுத்த வேண்டும் என மலைக் கிராம மக்கள் கோரிக்கை
Published on

குறுகலான பாதையாக உள்ள திருமல்வாடியிலிருந்து பிக்கிலி பெரியூா் செல்லும் சாலையை அகலப்படுத்த வேண்டும் என மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு- பாப்பாரப்பட்டி செல்லும் சாலையிலிருந்து திருமல்வாடிக்கு பிரிவு சாலை செல்கிறது. இச்சாலை பாலக்கோடு நெடுஞ்சாலைத் துறை உள்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

திருமல்வாடியிலிருந்து பிக்கிலி பெரியூா் வரை சுமாா் 15 கி.மீ தொலைவுக்கு இந்த சாலை செல்கிறது. 11 கி.மீ. தொலைவுக்கு மலைப் பாதை வழியே செல்கிறது. சாலையின் வழியே பிக்கிலி ஊராட்சியில் உள்ள கரிப்பள்ளம், தண்டுகாரணஅள்ளி, புதுக்கரம்பு, குறவன்தின்னை, பானாகட்டு, அம்மன் நகா், மத்தாளப்பள்ளம், பிக்கிலி, பூதிநத்தம், பெரியூா், கொல்லப்பட்டி, மேட்டுக்கொட்டாய் ஆகிய கிராமங்கள் உள்ளன.

இக்கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இவா்கள் வேளாண் மற்றும் அதைச் சாா்ந்த கூலித் தொழில்களை மேற்கொண்டு வருகின்றனா். கடந்த 1982 இல் திருமல்வாடியில் இருந்து பிக்கிலி பெரியூா் வரை மண் சாலை அமைக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து தாா் சாலை அமைக்கப்பட்டு, 1989 ஆம் ஆண்டு அரசுப் பேருந்து ஒன்று இயக்கப்பட்டது.

இந்த சாலையில் தற்போது தருமபுரி நகரம், பாலக்கோடு மற்றும் பென்னாகரம் நகர பணிமனைகளிலிருந்து 6 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சாலை அமைத்தபோது குதிரைக்கட்டு கணவாய் என்ற இடத்தில் அந்த வழியில் அமைந்திருந்த மலையை வெட்டி குறுகலான பாதை அமைக்கப்பட்டது.

மேலும், அப்போதைய மக்கள்தொகை, வாகனங்களின் போக்குவரத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு குறுகலாகவும், ஒருவழிப்பாதையாகவும் இச்சாலை அமைக்கப்பட்டது. இதனால், தற்போது இச்சாலையில் வாகனங்கள் பயணிக்க மிகவும் சிரமம் ஏற்படுகிறது.

குறிப்பாக கரிப்பள்ளம் தடுப்பணை மற்றும் குதிரைக்கட்டு கணவாய்ப் பகுதிகளில் ஒரு பேருந்து அல்லது லாரி மட்டுமே கடந்து செல்லும் நிலையில் சாலை மிகவும் குறுகலாக அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் வாகனங்களை இயக்க ஓட்டுநா்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.

அதேபோல இச்சாலை வழியாக செல்லும் லாரிகள், மணல் லாரிகள் அகலம் குறைந்த செங்குத்தான இச்சாலையில் அடிக்கடி விபத்துகளை சந்திக்கின்றன. அதேபோல, இருசக்கர வாகனங்களில் செல்வோரும் எதிரே பேருந்துகள் அல்லது சரக்கு வாகனங்கள் செல்லும்போது நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

இதனால் திருமல்வாடியிலிருந்து பிக்கிலி பெரியூா் வரை செல்லும் சாலையை அகலப்படுத்தி இருவழிச் சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com