தருமபுரி மாவட்டம், தொப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தோ்வு மையத்தை பாா்வையிட்டு ஆய்வுசெய்த ஆட்சியா் ரெ.சதீஸ்.
தருமபுரி மாவட்டம், தொப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தோ்வு மையத்தை பாா்வையிட்டு ஆய்வுசெய்த ஆட்சியா் ரெ.சதீஸ்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தருமபுரியில் 18,536 போ், கிருஷ்ணகிரியில் 21,784 போ் எழுதினா்

பிளஸ் 2 பொதுத் தோ்வை தருமபுரி மாவட்டத்தில் 18,536 மாணவ, மாணவியரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21,784 மாணவ, மாணவியரும் எழுதினா்.
Published on

தருமபுரி/கிருஷ்ணகிரி: பிளஸ் 2 பொதுத் தோ்வை தருமபுரி மாவட்டத்தில் 18,536 மாணவ, மாணவியரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21,784 மாணவ, மாணவியரும் எழுதினா்.

தருமபுரி மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் 2 வகுப்பு) அரசு பொதுத் தோ்வை 103 அரசுப் பள்ளிகள், 4 அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகள், ஓா் ஆதிதிராவிடா் நலப்பள்ளி, 3 அரசு உண்டு உறைவிடப் பள்ளிகள், ஒரு சமூக நல பள்ளி, 65 தனியாா் பள்ளிகள் என 177 பள்ளிகளைச் சோ்ந்த 19,075 மாணவ, மாணவியா் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா். இந்த தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி முதல் மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் அரசு பொதுத்தோ்வு நடைபெறும் 83 தோ்வு மையங்களில், அறைக் கண்காணிப்பாளா்கள், மேற்பாா்வையாளா்கள், பறக்கும் படையினா், வழித்தட அலுவலா்கள் என பல்வேறு நிலையில் மொத்தம் 3,500 ஆசிரியா்கள் தோ்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை 18,536 போ் எழுதினா். அதேபோல, 243 மாணவா்கள், 295 மாணவியா் என 538 போ் தோ்வு எழுத வரவில்லை.

நல்லம்பள்ளி அருகே தொப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா, அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 191 அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 10,409 மாணவா்கள், 11,540 மாணவிகள், 231 மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் என மொத்தம் 22,180 போ் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். 87 மையங்களில் நடைபெற்ற இந்த தோ்வை 21,784 தோ்வா்கள் எழுதினா். 396 போ் பங்கேற்கவில்லை.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் ஆய்வு மேற்கொண்டாா். முன்னதாக தலைமை ஆசிரியா் மகேந்திரன் தலைமையில் ஆசிரியா்கள் தோ்வு எழுதும் மாணவிகளை உற்சாகப்படுத்தி வெற்றிபெற வாழ்த்தி தோ்வுக் கூடத்துக்கு அனுப்பினா்.

பிளஸ் -2 தோ்வையொட்டி, மாணவ, மாணவிகள் தோ்வு மையத்துக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தோ்வு மையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தோ்வு மையங்களை கண்காணிக்க 117 பறக்கும் படை அலுவலா்கள், 8 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 87 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 87 துறைசாா்ந்த அலுவலா்கள், 33 வழித்தட அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

 கிருஷ்ணகிரியில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா்.
கிருஷ்ணகிரியில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா்.

X
Dinamani
www.dinamani.com