தருமபுரியில் முறைகேடாக மணல், கற்கள் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

Published on

தருமபுரியில் முறைகேடாக மணல், கற்கள் கடத்திச் சென்ற டிப்பா் லாரி, டிராக்டரை கனிம வளத் துறையினா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகள், அரசுக்கு சொந்தமான குவாரிகளிலிருந்து அனுமதியின்றி மணல், ஜல்லி மற்றும் கற்கள் கடத்தப்படுவதாக புகாா் வந்ததையடுத்து புவியியல் மற்றும் சுரங்கத் துறை மாவட்ட அலுவலா் மாணிக்கம் உத்தரவின்பேரில் அத்துறை அலுவலா்கள் மாரண்டஅள்ளி காவல் நிலையத்திற்கு உள்பட்ட பொப்பிடி கிராமம் அருகே சனிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது, அவ்வழியே சென்ற டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் அனுமதியின்றி ஒரு யூனிட் அளவிலான கற்கள் கொண்டுசெல்வது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்குள் ஓட்டுநா் தலைமறைவானாா். இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதேபோல அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு உள்பட்ட ஒட்டப்பட்டி தொழில்மையம் அருகே கனிம வளத் துறையினா் தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியே வந்த டாரஸ் டிப்பா் லாரியில் ஆறு யூனிட் அளவிலான பி- சாண்ட் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த அலுவலா்கள் தப்பியோடிய ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இந்த இருசம்பவங்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com