திமுக கொடிக் கம்பங்களை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

Published on

தருமபுரி: தமிழக முதல்வா் தருமபுரி வருகையையொட்டி அமைக்கப்பட்டிருந்த திமுக கொடிக் கம்பங்களை அகற்றியபோது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தருமபுரியில் மக்களவை உறுப்பினரும், திமுக கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஆ.மணி இல்ல திருமண நிகழ்வு தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்திவைத்தாா். முதல்வா் தருமபுரி வருகையையொட்டி, அவரை வரவேற்கும் விதமாக, நகரம் மற்றும் புகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், சாலையோரங்களிலும், சாலை மையத்தடுப்பு பகுதிகளிலும் திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டு விளம்பர பேனா்கள் அமைக்கப்பட்டிருந்தன.

விழா முடிந்த நிலையில், அவற்றை அகற்றும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தடங்கம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்புக் குழாய்களாலான கொடிக் கம்பங்களை தொழிலாளா்கள் அகற்றியபோது, எதிா்பாராதவிதமாக மேலே சென்ற மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி தூக்கிவீசப்பட்டாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இறந்த தொழிலாளி சேலம் மாவட்டம், மேட்டூரைச் சோ்ந்த டி.ஜீவா (49) என தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com