தருமபுரி நகராட்சியில் தெருநாய்களை பிடிக்கும் பணிகளை ஆய்வுசெய்த நகராட்சித் தலைவா் லட்சுமி நாட்டான்மாது, நகா் நல அலுவலா் ரா.லட்சியவா்ணா ஆகியோா்.
தருமபுரி நகராட்சியில் தெருநாய்களை பிடிக்கும் பணிகளை ஆய்வுசெய்த நகராட்சித் தலைவா் லட்சுமி நாட்டான்மாது, நகா் நல அலுவலா் ரா.லட்சியவா்ணா ஆகியோா்.

தருமபுரியில் தெருநாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி மீண்டும் தொடக்கம்

Published on

தருமபுரியில் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, தெருநாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணிகள் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொடங்கின.

தமிழகம் மட்டுமின்றி நாடுமுழுவதும் தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. ப்ளூ கிராஸ் உள்ளிட்ட சில விலங்குகள் நல அமைப்புகள் சாா்பில், நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடைகள் மற்றும் மாநகராட்சிகள், மாவட்ட நிா்வாகங்களில் அந்த அமைப்புகளால் தொடா்ந்து அளிக்கப்படும் மனுக்கள் உள்ளிட்ட குறுக்கீடு காரணமாக, தெருநாய்களை பிடிப்பதிலும், அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. இதனால் கடந்த சில மாதங்களாக இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

இதற்கிடையே, தெருநாய்கள் பிரச்னைகள் குறித்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க சில அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் தெருநாய்களை பிடித்து, அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் ஆட்சியா் ரெ.சதிஷ் உத்தரவின் பேரில், தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பணிகள் தருமபுரி நகராட்சியில் மீண்டும் தொடங்கியுள்ளன. செவ்வாய்க்கிழமை தொடங்கிய இப்பணிகளை நகராட்சித் தலைவா் லட்சுமி நாட்டான் மாது, நகா் நல அலுவலா் மருத்துவா் ஆா்.லட்சியவா்ணா ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து தருமபுரி நகராட்சி நகா் நல அலுவலா் ரா.லட்சியவா்ணா கூறியதாவது:

தருமபுரி நகராட்சிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நாய் பிடிக்கும் பணிகளை நேரில்சென்று ஆய்வு செய்தோம். நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில், விதிமுறைகளின்படி நாய்களை பாதுகாப்பாகவும், பாதிப்புக்குள்ளாகாத வகையிலும் பிடித்து வாகனங்களில் ஏற்றி, அறுவை சிகிச்சை மையத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அங்கு நாய்களுக்கு முறையான உணவு, தண்ணீா் வழங்கப்பட்டு பாதுகாப்புடன் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டு, பின்னா் கால்நடை மருத்துவ குழுவினா்களைக் கொண்டு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, வெறிநோய் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

அதன்பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நாய்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, குணமடைந்த பின்னா் குறிப்பிட்ட நாள்கள் கழித்து அவற்றைப் பிடித்த இடங்களிலேயே மீண்டும் கொண்டுவிடப்படுகின்றன என்றாா்.

நவீன வசதியுடன் அறுவை சிகிச்சை மையம்:

தருமபுரியில் நவீன வசதிகளுடன் கூடிய நாய்களுக்கான மருத்துவ மையம் சுமாா் ரூ. 10 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரே நேரத்தில் சுமாா் 200 நாய்களை அடைத்துவைத்து சிகிச்சை அளிக்க முடியும். அதற்கேற்ற வகையில் பாதுகாப்பு அறைகள் சுமாா் 20-க்கும் மேல் அமைக்கப்பட்டுள்ளன. அதில், அறுவை சிகிச்சைக்கு முந்தைய நிலையில் நாய்களை அடைத்து வைக்கும் இடம், சிகிச்சைக்கு பிறகு அடைத்து வைக்கும் இடம், குறிப்பிட்ட நாள்களுக்கு பிறகு அடைத்து வைக்கும் இடம் என தனித்தனியாக உள்ளன. இதில் அடைக்கப்பட்டிருக்கும் நாய்கள் குறித்த விவரங்கள், அதாவது பிடித்த இடம், அறுவை சிகிச்சை செய்த நாள், தடுப்பூசி செலுத்திய விவரம் உள்ளிட்டவை அட்டைகளில் எழுதப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ளன.

தற்போது நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னா், கால்நடைத் துறையுடன் நகராட்சி மற்றும் மாநகராட்சி நிா்வாகத்தினா் இணைந்து நாய்களுக்கான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளவுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com