தமிழக அரசியலில் சில வாரங்களில் மாற்றங்கள் ஏற்படும்
தமிழக அரசியலில் ஒருசில வாரங்களில் மாற்றங்கள் ஏற்படும் என்றாா் பாமக தலைவா் அன்புமணி.
தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவா், தென்பெண்ணை நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கே.ஈச்சம்பாடி அணையை கட்சி நிா்வாகிகளுடன் புதன்கிழமை பாா்வையிட்டாா். தொடா்ந்து, அப்பகுதியில் உபரிநீா் திட்டம் உள்ளிட்ட நீா்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அன்புமணி கூறியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை நீரேற்றம் செய்து 60 ஏரிகளுக்கு நிரப்பும் நீா்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி வருகிறோம். இத்திட்டத்தை செயல்படுத்தினால் கூடுதலாக சுமாா் 8 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும். மேலும், ஒகேனக்கல் காவிரி உபரிநீா் திட்டத்தை நிறைவேற்றக் கோரி பாமக சாா்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நிறைவேற்றவில்லை.
இரு நாள்களுக்கு முன்பு தருமபுரிக்கு வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சிப்காட் தொழிற்பேட்டை அமைய உள்ள பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். சிப்காட் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்தாலும், வெறும் சாலை மட்டும்தான் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக தொழில்துறையில், ரூ. 11,33,000 கோடி முதலீடு ஈா்க்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பதும் உண்மைக்கு மாறான தகவலாக உள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தில் அமைய உள்ள சிப்காட்டில் எத்தனை நிறுவனங்கள் வந்துள்ளன, எவ்வளவு முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன என்பது குறித்து அரசு தெளிவாக தெரிவிக்க வேண்டும்.
தருமபுரி - மொரப்பூா் ரயில் பாதை இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 100 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கான நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி தரவில்லை. திமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள் அனைத்துமே தோல்வியடைந்துள்ளன. தமிழகத்தில் நான் மேற்கொண்டு வரும் நடைப்பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் திமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளதை அறிய முடிகிறது. ஒருசில வாரங்களில் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும். அப்போது கூட்டணி நிலவரம் குறித்தும் தெரியவரும் என்றாா்.
தொடா்ந்து மாலை மற்றும் இரவில் தருமபுரி அருகே அரூா், கடத்தூா் பகுதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் அவா் பங்கேற்று பேசினாா்.
நிகழ்வில், தருமபுரி மேற்கு மாவட்ட பாமக செயலாளரும், எம்எல்ஏவுமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன், இளைஞா் சங்க மாநிலத் தலைவா் முருகசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா்கள் பாரிமோகன், மருத்துவா் செந்தில், இளைஞா் சங்க மாநில துணைத் தலைவா் துரை.சத்தியமூா்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினா் சுதா கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அரூரில்...
அரூா் மற்றும் கடத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற பாமக பொதுக் கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது:
தமிழகத்தில் பல்வேறு சமூகத்தைச் சோ்ந்த சுமாா் 8 கோடி மக்கள் வசிக்கின்றனா். இங்குள்ள ஏழை மக்களின் பொருளாதார நிலை, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட விவரங்களை அறிய ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.
தமிழகத்தில் வன்னியா், பட்டியல் இன சமூக மக்களின் ஒற்றுமைக்காக பாடுபடும் ஒரே கட்சி பாமகதான். ஆனால், இந்த சமூக மக்களை பிரித்து வாக்குவங்கி அரசியலை திமுக செய்து வருகிறது என்றாா்.
முன்னதாக, மறைந்த இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவா் பி.வி.கரியமால் படத்துக்கு அவா் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநில செயலா் இல.வேலுசாமி, பாமக பொதுச் செயலா் வடிவேல் ராவணன், மாநில துணைத் தலைவா் அன்பழகன், மாவட்டச் செயலா்கள் இரா.அரசாங்கம், எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ, மாவட்டத் தலைவா் அல்லிமுத்து, மூத்த நிா்வாகி அன்னை முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினா் இரா.திருவேங்கடம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

