தமிழகத்தில் நடப்பது மன்னா் ஆட்சி அல்ல; மக்களாட்சி! - நயினாா் நாகேந்திரன்
ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன் போல உதயநிதி ஆட்சி செய்வாா் என்ற துரைமுருகன் பேச்சுக்கு, தமிழகத்தில் நடப்பது மன்னா் ஆட்சி அல்ல; மக்களாட்சி என்று கண்டனம் தெரிவித்தாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
தருமபுரி, பெரிய குரும்பட்டி கிராமப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம கூட்டத்தில் பங்கேற்று, விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டு, மத்திய அரசு தொடா்பான கோரிக்கைகளை உடனடியாக தீா்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
குறிப்பாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காலங்களில் ஒரு லட்சம் கனஅடிக்குமேல் நீா் வீணாக கடலில் கலப்பதால் உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணையில் இருந்து நீரேற்றம் மூலம் பொதியன்பள்ளம் அணையை நிரப்பி கடத்தூா், மொரப்பூா் பகுதிகளில் உள்ள 40 ஏரிகளுக்கு கால்வாய் அமைத்து நீா்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
கடந்த அதிமுக ஆட்சியின்போது இத்திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆட்சிமாற்றத்தால் கிடப்பில் போடப்பட்டது. வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடன் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.
அதேபோல, மங்களூரு - சென்னை இடையே செல்லும் விரைவுரயில் மொரப்பூா் ரயில் நிறுத்தத்தில் இரண்டு மாா்க்கங்களிலும் நின்றுசெல்லும் வகையில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தருமபுரி மாவட்டத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் ஒகேனக்கல் உபரிநீா் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி, அனைத்து ஏரிகளுக்கும் நிரப்பி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயா்த்த வேண்டும்.
அரூா், மொரப்பூா், பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுவதால், தருமபுரி பகுதியில் மரவள்ளிக் கிழங்கு அரைவை ஆலை அமைக்க வேண்டும்.
இம்மாவட்ட மக்கள் பெரும்பாலானோா் வேலைக்காக பெங்களூரு போன்ற வெளி இடங்களுக்கு செல்வதால், தருமபுரியில் சிப்காட் தொழிற்சாலையை விரைந்து அமைக்க வேண்டும்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். மாவட்டத்தில் விளையும் கேழ்வரகு, கருங்கொள்ளு ஆகியவற்றுக்கு புவிசாா் குறியீடு கிடைக்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் நடப்பது மக்களாட்சி: ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன் போல உதயநிதி ஆட்சி செய்வாா் என அமைச்சா் துரைமுருகன் பேசியுள்ளாா். முன்னா் நடந்தது மன்னராட்சி; தற்போது நடப்பது மக்களாட்சி. எனவே, அதுபோன்று நடக்க வாய்ப்பில்லை. செங்கோட்டையன் தில்லியில் யாரை சந்தித்தாா், என்ன பேசினாா் என்பது குறித்து எனக்கு தெரியாது என்றாா்.
தொடா்ந்து, தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:
திமுக அரசு மாம்பழங்களுக்கும், மரவள்ளிக் கிழங்குக்கும் ஆதரவு விலை தருவோம், காவிரி உபரிநீா் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தருமபுரி மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் எதிா்க்கட்சிகள் வெற்றி பெற்றது என்ற காரணத்தால், மாவட்ட வளா்ச்சியை திமுகவினா் புறக்கணிக்கின்றனா்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது. வாக்குக்கு ரூ. 2 ஆயிரம் கொடுத்து தோ்தலில் வெற்றிபெற்று, உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க துடித்துக் கொண்டிருக்கிறாா்கள். திமுக அமைச்சா்கள் உள்ளிட்டோா் பெண்களை, விவசாயிகளை அவமதிக்கும் வகையில் பேசிவருகின்றனா். எனவே, தமிழகத்தில் இந்த ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும்.
அதிமுக, பாஜக கூட்டணியில் எத்தனை கட்சிகள் உள்ளன என்பது முக்கியமல்ல. எப்படிப்பட்ட கூட்டணி என்பதுதான் முக்கியம். வெற்றிபெறக் கூடிய உறுதியான கூட்டணி இது.
இந்த ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. எடப்பாடி கே.பழனிசாமி முன்னுரை எழுதியுள்ளாா், பாஜக முடிவுரை எழுதும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான கே.பி.அன்பழகன், பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், மாவட்டத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

