காட்டுப்பன்றி தாக்கியதில் காயமடைந்தவா் மருத்துவமனையில் அனுமதி
பென்னாகரம்: பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது காட்டுப்பன்றிகள் தாக்கியதில் பலத்த காயமடைந்தவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கிலி வனப்பகுதியை ஒட்டியுள்ள சஞ்சீவபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (54). இவா், பாப்பாரப்பட்டி பகுதியிலிருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுப்பன்றிகள் சாலையைக் கடக்க முயற்சித்துள்ளன. இதையறிந்த முருகன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியபோது, சாலையைக் கடந்துச் சென்ற காட்டுப்பன்றிகள் அவரைத் தாக்கின. இதில் பலத்த காயமடைந்த அவரை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
