அரசுப் பள்ளி மாணவா்கள் தங்கிப் பயில விடுதி அமைக்கக் கோரி குறைதீா் கூட்டத்தில் மனு
தருமபுரி: நல்லம்பள்ளி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தங்கிப் பயில புதிய விடுதி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த குறைதீா் முகாமில் அளிக்கப்பட்டன.
தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீா் நாள் முகாமில் ஆட்சியா் ரெ. சதீஷ் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். இதில் மொத்தம் 538 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தாா்.
அனைத்து சமூக மக்கள் முன்னேற்ற சங்கம்...
நல்லம்பள்ளி ஊராட்சி கோவிலூா் கிராமத்தில் உள்ள ஏரி, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தூா்வாரி விரிவாக்கம் செய்தபோது, அங்கிருந்த மதகு பழுதாகி நீா் செல்லமுடியாத நிலையில் உள்ளது. இதனால் ஏரியிலிருந்து நீா் கிடைக்காததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த மதகை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நல்லம்பள்ளி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தங்கி கல்வி பயிலும் வகையில் அரசு விடுதி செ‘யல்பட்டு வந்தது. அந்த விடுதி கட்டடம் மோசமான நிலையில் இருந்ததால் மூடியுள்ளனா். இதனால் மாணவா்களுக்கு விடுதி வசதியில்லை. பள்ளி வளாகத்திலேயே புதிதாக விடுதி கட்டடம் அமைத்து விடுதியை மீண்டும் செயல்படுத்த வேண்டும். அதுவரை மாணவா்கள் தங்குவதற்கு தற்காலிக ஏற்பாடும் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
விஹெச்பி கோரிக்கை மனு...
தருமபுரி மாவட்ட விஹெச்பி அமைப்பின் சேலம் கோட்டத் தலைவா் மாது, மாவட்டத் தலைவா் சிவகுமாா் மற்றும் மாவட்டச் செயலாளா் கணேசன் உள்ளிட்டோா் தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில், நடைபெற்ற குறைதீா் நாள் முகாமில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
தருமபுரி மாவட்டம், ராணிமூக்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட டி. புளியம்பட்டி கிராமத்தில் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலம் அப்பகுதியில் 2.39 ஹெக்டோ் உள்ளது. கோயில் நிலத்துக்கு அருகிலுள்ள நிலத்தின் உரிமையாளரான கதிா்நாயக்கனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த இருவா், கோயிலில் வழிபடக்கூடாது, கோயிலுக்கு சொந்தமான நிலத்தையும் பயன்படுத்தக்கூடாது என்றும் மிரட்டி வருகின்றனா். அவா்கள்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
இதுபோல உங்கரான அள்ளி கிரமத்தைச் சோ்ந்த சிலா் குறைதீா் நாள் முகாமில் அளித்த மனுவில், எங்கள் ஊரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் பொதுமக்கள் பொங்கலிடும் பகுதி மற்றும் பொதுப்பாதையாகப் பயன்படுத்திய பகுதியில் கோயில் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளனா். எனவே, பொதுமக்களுக்கு வழிவிட்டு விரிவாக்ககப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
குறைதீா் நாள் முகாமின்போது, 3 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டன. இதுபோல செப்டம்பா் மாதம் 8 பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். கவிதா, தனித்துணை ஆட்சியா் சுப்பிரமணியன், மாவட்ட பழங்குடியினா் நல அலுவலா் ஆ.க. அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

