வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
தருமபுரி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
தருமபுரி மாவட்டத்தில் அரசின் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில், உணவுப் பாதுகாப்புத் துறை, நகராட்சி நிா்வாகம், ஊராட்சி மற்றும் காவல் துறை இணைந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ள ஆட்சியா் ரெ.சதீஸ் உத்தரவிட்டிருந்தாா்.
அதன்பேரில், தருமபுரி நகராட்சி நகா்நல அலுவலா் மருத்துவா் லட்சியவா்ணா, உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் கைலாஷ் குமாா், தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் தலைமையிலான காவலா்கள் அடங்கிய குழுவினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, தருமபுரி நகராட்சிக்குள்பட்ட கொல்லஅள்ளி சாலையில் வேடியப்பன் திட்டு பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் ஆய்வு மேற்கொண்டனா். அதில், மளிகைக் கடை உரிமையாளா் வீட்டின் அறையில் மறைத்துவைத்து விற்பனை செய்த ஹான்ஸ், கூல் லிப், பான்மசாலா உள்ளிட்ட சுமாா் 100 கிலோ அளவிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், அவற்றை பதுக்கி வைத்த கடை உரிமையாளருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து, 30 நாள்கள் கடை திறக்க தடைவிதித்தனா்.
