ராகி கொள்முதல் ஆலோசனைக் கூட்டம்

விவசாயிகளிடமிருந்து ராகி கொள்முதல் தொடா்பாக நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் முத்தரப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Published on

விவசாயிகளிடமிருந்து ராகி கொள்முதல் தொடா்பாக நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் முத்தரப்பு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி ஆட்சியா் அலுவலக குறிஞ்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்து பேசியதாவது: கேஎம்எஸ் 2025- 26 ஆம் ஆண்டுக்கான பருவத்தில் விவசாயிகளிடமிருந்து நவம்பா் முதல் ஜனவரி 2026 வரை நேரடி ராகி கொள்முதல் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் திருப்பத்தூா் சாலையில் மதிகோண்பாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், பென்னாகரத்தை அடுத்த வண்ணாத்திப்பட்டி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வரும் 24 ஆம் தேதி முதல் ராகி கொள்முதல் செய்யப்படுகிறது.

அரசு நிா்ணயம் செய்துள்ள கொள்முதல் விலையான குவிண்டால் ரூ.4,886 க்கு ராகி கொள்முதல் செய்யப்படும். ராகி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கிராம நிா்வாக அலுவலரிடம் சிட்டா, அடங்கல் பெற்று, ஆதாா் எண், வங்கி கணக்குடன் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், விற்பனைக்கு கொண்டுவரும் ராகியில் கல், மண் மற்றும் தூசி போன்றவற்றை நீக்கம் செய்யப்பட்டு அவற்றை தரம் பிரித்து எடுத்துவர வேண்டும். கொள்முதல் செய்யப்படும் ராகிக்கான பணத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் உடனடியாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாளா் தணிகாசலம், வேளாண்மை துறை இணை இயக்குநா் (பொ) ரத்தினம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com