புகையிலைப் பொருள்கள் விற்ற கடைகளுக்கு ரூ.50,000 அபராதம்
பாப்பாரப்பட்டியில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் தலைமையிலான குழுவினா் பாப்பாரப்பட்டி பகுதியில் உள்ள கடைகளில் போதைப்பொருள் விற்பனை குறித்து வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, மின்வாரிய அலுவலகம் எதிரே செயல்படும் 2 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அக்கடைகளுக்கு தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இரு கடைகளும் 15 நாள்களுக்கு திறக்க தடை விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதுதவிர பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால் உணவு பாதுகாப்பு துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறைகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், உணவு பாதுகாப்புத் துறையை 94440 42322 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டும், வாட்ஸ்அப் மூலமும் தகவல் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
