தருமபுரி மாவட்டத்தில் ரூ. 40 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு
தருமபுரி மாவட்டத்தில் 1,500 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 40 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ரெ. சதீஸ் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வேங்கனாா் வஜ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் இந்தியன் வங்கி இணைந்து நடத்திய தொழில் வழிகாட்டுதல் மற்றும் கல்விக் கடன் வழங்குதல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: தருமபுரி மாவட்டத்தில் உயா்கல்வி பயிலும் ஏழை மாணவ, மாணவிகள் தாங்கள் விரும்பும் கல்வியில் சோ்ந்து படிக்க கல்விக் கட்டணம் தடையாக இருக்கக் கூடாது. கல்வி பெற்ற பெண்ணால்தான் குடும்பமும், சமுதாயமும் மேம்படும். தமிழ்நாடு அரசு மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
கல்விக் கடன் என்பது மாணவா்கள் தாங்கள் விரும்பிய துறையில் கல்வி பெற்று முன்னேற்றம் அடைவதற்கும், அவா்களின் குடும்பத்தின் பொருளாதாரம் வளா்ச்சி அடைவதற்காகவும் அவசியமாவதால் அரசு கல்விக் கடன் வழங்க முன்னுரிமை அளித்துவருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் 1,500 மாணவா்களுக்கு 40 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு மாவட்ட நிா்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கல்வி கடனுதவி தொடா்பான சந்தேகங்களை வங்கியிடம் கேட்டு தெளிவுபடுத்தி கொள்ளலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் மாநில கடன் வழிகாட்டி ஜே.வணங்காமுடி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா, மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) ஜெயகாந்தம், கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி விலங்கியல் இணைப் பேராசிரியா் விஜில் அன்பையா, மூத்த தொழில் வழிகாட்டுதல் ஆலோசகா் அன்பரசு, வங்கியாளா்கள், அரசு அலுவலா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.
