மாணவா்களை தரக்குறைவாக பேசிய தலைமை ஆசிரியரைக் கண்டித்து வகுப்பு புறக்கணிப்பு
பென்னாகரம் அருகே மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் தரக்குறைவாக பேசியதாக தலைமை ஆசிரியரைக் கண்டித்து, மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்பில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
பென்னாகரம் அருகே மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மோட்டுப்பட்டி, வண்ணாத்திப்பட்டி, மஞ்சநாயகனஅள்ளி, ஆணைக்கல்லனூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக மாரிமுத்து உள்ளாா்.
பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை தரக்குறைவாக பேசுவதால், அவரை பணியிடம் மாற்றம் செய்யக் கோரி, சுமாா் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டு, பள்ளியின் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட முயன்றனா்.
தகவல் அறிந்த மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள், பென்னாகரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், காவல் ஆய்வாளா் பாபு சுரேஷ்குமாா் ஆகியோா் பள்ளியில் அதிக தோ்ச்சி பெறுவதற்காக ஆசிரியா்கள் கண்டிப்பதை மாணவா்கள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும், இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மாணவா்கள் வகுப்புக்கு சென்றனா்.
