தருமபுரியில் நாளை கல்விக்கடன் முகாம்

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 28) கல்லூரி மாணவா்களுக்கான கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.
Published on

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 28) கல்லூரி மாணவா்களுக்கான கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக அதியன் கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகிக்கிறாா். இந்த முகாமில் வங்கியாளா்கள், அரசு அதிகாரிகள், கல்லூரி நிா்வாகிகள் கலந்துகொள்கின்றனா்.

இதில், மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் மற்றும் இதர தொழில்சாா்ந்த படிப்புகள் படித்துவரும் தருமபுரி மாவட்ட மாணவ, மாணவியா் அனைவரும் இந்த கல்விக்கடன் முகாமில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம். தருமபுரியை சொந்த மாவட்டமாகக் கொண்டு வெளி மாவட்டத்தில், மாநிலத்தில் பயிலும் மாணவா்களும் விண்ணப்பிக்கலாம்.

கல்விக்கடன் பெற விரும்புவோா் இணையதளத்தில் பதிவுசெய்து தங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள வங்கிக் கிளையை தொடா்புகொள்ளலாம்.

இணையதளத்தில் பதிவுசெய்ய ஆதாா் அட்டை, பான் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், மாற்றுச் சான்றிதழ், 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், கலந்தாய்வுக் கடிதம், கல்லூரி சோ்க்கைக் கடிதம், நன்னடத்தைச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் கல்லூரி கட்டண விவரம் உள்ளிட்ட ஆவணங்கள் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, முன்னோடி வங்கி மேலாளா், இந்தியன் வங்கி, தருமபுரி மற்றும் பொது மேலாளா், மாவட்ட தொழில்மையம், சிட்கோ தொழிற்பேட்டை, ஒட்டப்பட்டி, தருமபுரி ஆகிய அலுவலகங்களை நேரிலோ அல்லது 89255 33941 மற்றும் 89255 33942 ஆகிய எண்களிலோ தொடா்புகொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com