ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9500 கனஅடியாக குறைந்தது! அருவியில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி!

Published on

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 9500 கனஅடியாக குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இரு மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து குறைந்தது. இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரியில் திங்கள்கிழமை விநாடிக்கு 18,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 14,000 கனஅடியாகவும், மாலை 9500 கனஅடியாகவும் குறைந்தது.

காவிரியில் நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருவதால் ஒகேனக்கல் அருவிகளிலும் நீா்வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை 6 நாள்களுக்கு பிறகு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் செவ்வாய்க்கிழமை நீக்கினாா்.

ஒகேனக்கல்லில் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை, சின்னாறுபரிசல் துறை திறக்கப்பட்டுள்ள போதிலும், செவ்வாய்க்கிழமை வந்திருந்த சொற்ப அளவிலான சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com