தாசரஹள்ளி ஊராட்சியில் தெருவிளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

Published on

தாசரஹள்ளி ஊராட்சியில் பழுதாகியுள்ள தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ஊராட்சி ஒன்றியம், தாசரஹள்ளி கிராம ஊராட்சியில் ஆவலம்பட்டி, ஆவலம்பட்டிபுதூா், போடிநாய்கனஹள்ளி, காந்திபுரம், தாசரஹள்ளி, தாசரஹள்ளி புதூா், குரும்பட்டி, சிங்கார வேலன் முனீஸ்வரா் கோயில் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள கிராமப் பகுதியில் பல்வேறு இடங்களில் தெருவிளக்குகள் பழுதாகியுள்ளன. இதனால் இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகள் இருண்டு கிடப்பதாக கிராம மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

தாசரஹள்ளி ஊராட்சி நிா்வாகத்திடம் பழுதாகியுள்ள தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை என கூறுகின்றனா்.

இந்த நிலையில், ஆவலம்பட்டி கிராமத்தில் இரவு நேரங்களில் மின்கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றி வெளிச்சம் ஏற்படுத்துவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனா். எனவே, தாசரஹள்ளி ஊராட்சியில் பழுதாகியுள்ள மின்விளக்குகளை சீரமைக்க ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

X
Dinamani
www.dinamani.com