முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்: ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம்!

Published on

கந்தசஷ்டி விழாவின் தொடா்ச்சியாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில், திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோயில்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையடுத்து மற்றுமொரு முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 60-ஆவது ஆண்டு கந்த சஷ்டி லட்சாா்ச்சனை கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து லட்சாா்ச்சனையும் நடைபெற்றது. திங்கள்கிழமை இரவு நடந்த சூரசம்ஹார நிகழ்வும் அதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தா்கள் இதில் பங்கேற்றனா்.

திருக்கல்யாண உற்சவம்: செவ்வாய்க்கிழமை இரவு முருகன்- தெய்வானை திருக்கல்யாண வைபவம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். , இரவு திருக்கல்யாண உற்சவம், உபகார பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவை யொட்டி பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது.

தொடா்ந்து இரவு தொடங்கி விடியவிடிய மேளதாளங்கள் முழங்க தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறையினா், விழா குழுவினா் மற்றும் செங்குந்தா் சமூகத்தினா் செய்திருந்தனா். இதுபோல கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார நிகழ்வு மற்றும் திருக்கல்யாணம் விழா அன்னசாகரம் முருகன் கோயில், பாப்பாரப்பட்டி முருகன் கோயில்களிலும் சிறப்பாக நடைபெற்றன. இவற்றில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com